FACT CHECK: பேருந்தில் பயணிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்?- வைரலாகும் பழைய புகைப்படத்தால் குழப்பம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுந்த முன்னேற்பாடு செய்துகொண்டு, பஸ் பயணிகளை சந்தித்த படம், என்று சமூக ஊடகங்களில் சிலர் பழைய படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
மு.க.ஸ்டாலின் பஸ்ஸில் பயணிகளுடன் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஆமா..திடீர்னு(?) பஸ்ஸூக்குள்ளே தோரணம் எப்படி வந்துச்சு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?.. சென்னையன்ஸ அவ்வளவு பலகீனமாவா இருக்கீங்க..ஏமாறுமளவு?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஜெய் காளி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு அரசு பஸ் ஒன்றில் ஏறி, அதில் பயணம் மேற்கொண்ட மக்களிடம் பேசினார். இது தொடர்பான செய்தி, வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டன. இந்த சூழலில், ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பது போன்று பஸ்ஸில் தோரணம் கட்டி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் படம் ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் 2021 அக்டோபர் 23ம் தேதி சென்னை கண்ணகி நகரில் நடந்த சிறப்புத் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்யச் சென்ற போது பஸ்ஸில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பஸ் பயணத் திட்டம் பற்றிக் கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலின் முகக் கவசம் அணிந்தபடி பஸ்ஸில் மக்களுடன் பேசியதாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், மாஸ்க் அணியாமல் ஸ்டாலின் இருப்பது போன்ற படம் பகிரப்பட்டுள்ளதால் இது பற்றி உண்மை அறியும் ஆய்வை நடத்தினோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
அசல் பதிவைக் காண: dtnext.in I Archive 1 I asianetnews.com I Archive 2
2019ம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, பஸ்ஸில் பொது மக்களிடம் மு.க.ஸ்டாலின் உரையாடினார் என்று dtnext.in இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். பல ஊடகங்களிலும் இந்த படத்தை 2019ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு பயன்படுத்தி வந்துள்ளனர். சில இணைய ஊடகங்கள் இந்த படத்தை தற்போது கண்ணகி நகரில் ஆய்வு மேற்கொள்ள ஸ்டாலின் சென்ற போது பஸ்ஸில் பயணிகளுடன் பேசிய செய்தியுடனும் பகிர்ந்திருந்தன. இதன் காரணமாக குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஸ்ஸில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பஸ் பயணத் திட்டம் பற்றிக் கேட்டறிந்தது 2021 அக்டோபர் 23ம் தேதியாகும். ஆனால், பஸ்சுக்குள் தோரணம் கட்டப்பட்ட படம் 2019ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலின் போது எடுக்கப்பட்டது.
பழைய படத்தை எடுத்து, இப்போது எடுக்கப்பட்டது போன்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மு.க.ஸ்டாலின் 2019ம் ஆண்டு பஸ் பயணிகளிடம் பேசிய படத்தை தற்போது சிலர் தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பேருந்தில் பயணிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்?- வைரலாகும் பழைய புகைப்படத்தால் குழப்பம்!
Fact Check By: Chendur PandianResult: False