அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும் 12ம் வகுப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

வாசகர் ஒருவர் வாட்ஸ் அப் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், "அனைவர்க்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் Scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்ப மாணவர்களுக்கு ரூ.10,000மும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும்.

இந்த பதிவை தவிர்த்துவிடாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்குத் தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே.

உயர் நீதிமன்ற உத்தரவு எண்:

WP (MD) NO. 20559/2015″ என்று இருந்தது.

ஃபேஸ்புக்கில் தேடியபோது 2015ம் ஆண்டில் இருந்து இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. தற்போது கூட ஏராளமானோர் இதை பெரிய சேவையாக கருதி ஷேர் செய்து வருகின்றனர். Jesu Sellam என்பவர் 2020 ஆகஸ்ட் 6ம் தேதி பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:

மத்திய அரசு அறிவிப்பு அரசாணை இருக்கும். இதற்கு எதற்கு நீதிமன்ற உத்தரவு என்ற புரிதல் இன்றி யாராவது ஒருவருக்கு பயன்படட்டுமே என்ற நம்பிக்கையில் பலரும் ஷேர் செய்து வந்திருப்பது தெரிகிறது.

இந்த தகவல் உண்மையா என்று அறிய தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரைத் தொடர்புகொண்டோம். அமைச்சர் ஊரில் உள்ளதால் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் முழுவதையும் அவர்களிடம் படித்துக் காட்டினோம். ‘’இது தவறான தகவல். இது போன்று நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து உதவித் தொகை பெறுவது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லை" என்றனர்.

rtigovindaraj.blogspot.comArchived Link

சரி உயர் நீதிமன்ற ரிட் பெட்டிஷன் நம்பர் எதைப் பற்றி சொல்கிறது என்று தேடிப் பார்த்தோம். அப்போது அது கிராமிய ஆடல் பாடல் விழா மற்றும் கோவில்களுக்கு வருபவர்கள் அணிந்திருக்க வேண்டிய ஆடை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்புடையது என்பது தெரிந்தது. அதற்கும் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கும் தொடர்பு இல்லை என்று தெரிந்தது.

மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்கார்ஷிப் ஏதும் வழங்குகிறதா என்று பார்த்தோம். அப்படி சில திட்டங்கள் உள்ளன. ஆனால் எதுவும் அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் இல்லை. அதுவும் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஸ்காலர்ஷிப் என்று இல்லை. ஸ்காலர்ஷிப் பெறத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, சிறப்பு தேர்வு நடைபெறும், அதில் வெற்றி பெற்றால் மாதத்துக்கு ஆயிரம் வீதம் 12 ஆயிரம் வழங்கப்படும் என்று இருந்தது. மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் தொடர்பான தகவலைப் பெற scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

வாஜ்பாய், அப்துல் கலாம் பெயரில் ஸ்காலர்ஷிப் என்று பரவும் வதந்தி பற்றி வேறு யாராவது செய்தி வெளியிட்டுள்ளார்களா என்று தேடிய போது தினமலர் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. வாட்ஸ் ஆப்பில் உதவித் தொகை வதந்தி நம்ப வேண்டாம் என்று அறிவுரை என்று குறிப்பிட்டிருந்தனர்.

dinamalar.comArchived Link

"மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர். இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள், 'தகவல் போலியானது; யாரும் நம்ப வேண்டாம்' என, தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜனிடம் கேட்டபோது, "மத்திய அரசு, அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. கோவில்களுக்கு ஆடை அணிந்து வருவது குறித்து, கோர்ட் கட்டுப்பாடு விதித்த உத்தரவு எண்ணுடன், 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் பரவியது தெரியவந்தது.இதுகுறித்து, 'வாட்ஸ்- ஆப்'பில், மறுப்பும் வந்துள்ளது. பொதுமக்கள் யாரும், இதை நம்ப வேண்டாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது," என்றார்" என அதில் குறிப்பிட்டிருந்தனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ளது போன்று எந்த ஸ்காலர்ஷிப்பும் இல்லை. அதில் உள்ள நீதிமன்ற ஆணை எண் என்பது கோவிலுக்கு வருபவர்களுக்கு உடை தொடர்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா?

Fact Check By: Chendur Pandian

Result: False