சைமன் என்று வேட்புமனுவில் குறிப்பிட்ட சீமான்?- பரவும் போலி வேட்பு மனு

அரசியல் சமூக ஊடகம்

2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீமான், தன்னுடைய வேட்பு மனுவில் சைமன் என்னும் சீமான் என்று குறிப்பிட்டதாக ஒரு வேட்பு மனுவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நாம் தமிழர் சீமான். வேட்புமனுவில் தன் உண்மையான பெயர் சைமன் என்றும் தன் தந்தை பெயர் செபாஸ்டியன் என்றும் குறிப்பிட்ட பத்திரம் போட்டோ.

Archived link

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2016 சட்டமன்ற தேர்தலில் கடலூரில் போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னுடைய பெயர் சைமன் என்றும் தன்னுடைய தந்தையின் பெயர் செபஸ்டியன் என்றும் குறிப்பிட்டுள்ளதாக வேட்புமனுவின் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. நம் டி.வி ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவு மே 12ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி ஏராளமானோர் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவர் பெயரை சைமன் என்று கொடுத்ததாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை. தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது அவர் வேட்பு மனுவின் புகைப்படம் வைரல் ஆகி வருவதால் அதன் நம்பத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில், சைமன் என்று வேட்பு மனு தாக்கல் செய்த சீமான் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

2016ம் ஆண்டு சீமான் வேட்பு மனு தாக்கல் செய்த செய்திகள் கிடைத்தன. ஆனால், அதில் எதிலும் சைமன் என்று தன்னுடைய பெயரை சீமான் குறிப்பிட்டதாகக் கூறப்படவில்லை. சீமான் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு அரசு தரப்பில் இணையத்தில் வெளியிடப்படுகிறது. http://affidavitarchive.nic.in  என்ற அரசு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள சீமானின் வேட்புமனுவை எடுத்து ஆய்வு செய்தோம். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதில், “செந்தமிழன் என்பவரின் மகனும் 50 வயதுடைய வெங்கடேச நகர், 2வது குறுக்குத் தெரு, விருகம்பாக்கம், சென்னை -92 என்ற முகவரியில் வசிக்கின்ற, இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளருமாகிய சீமான் என்கிற நான், இதனால், சத்திய பிரமாணம் செய்து, கீழ்க்கண்டவாறு உறுதியளிக்கிறேன்” என்று இருந்தது. சீமான் என்றே கையெழுத்தும் இட்டுள்ளார்.

இதன் மூலம், சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவை எடுத்து, சீமான் மற்றும் அவரது அப்பாவின் பெயரை மாற்றியதுடன், கையொப்பத்தையும் மாற்றி மார்ஃபிங் செய்து பதிவிட்டுள்ளது உறுதியாகிறது.

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்குக் கிடைத்த ஆதாரங்கள்:

1) 2016ம் ஆண்டு அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது சைமன் என்று குறிப்பிட்டதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

2)  2016ம் ஆண்டு கடலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த விவரம் புதிய தலைமுறை செய்தியிலிருந்து கிடைத்துள்ளது.

3) அனைத்துக்கும் மேலாக, 2016ம் ஆண்டு சீமான் தாக்கல் செய்த வேட்பு மனு பத்திரம் அரசு இணையத்திலிருந்து கிடைத்துள்ளது. அதில், அவர் பெயர் சீமான் என்றே உள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், ‘சைமன் என்று தன்னுடைய உண்மையான பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த சீமான்’ என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:சைமன் என்று வேட்புமனுவில் குறிப்பிட்ட சீமான்?- பரவும் போலி வேட்பு மனு

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •