
‘’லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக பொருளாளர் மணிகண்டன் கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
Yousuf Riaz என்பவர் இந்த பதிவை அக்டோபர் 4, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், ‘’லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த விளமல் பகுதி பாஜக நிர்வாகி மணிகண்டன், சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு சென்று வந்ததாக தெரிகிறது. எனவே இக்கொள்ளையில் வடமாநில கொள்ளையர்களுக்கு சந்தேகம் இருக்கலாம் என போலீஸ் விசாரணை, #திருட்டுபாஜக,’’ என எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி கடையின் சுவரை துளை போட்டு, ஏராளமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, மணிகண்டன் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஆனால், அந்த நபரை பாஜகவைச் சேர்ந்தவர் எனக் கூறி பலரும் வதந்தி பகிர்வதால், சமூக ஊடக பயனாளர்கள் குழப்பம் அடைந்தனர். குறிப்பாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உடன் அவர் நிற்கும் புகைப்படம் ஒன்றை போலியாகச் சித்தரித்தும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தனர். இதுதொடர்பாக, நாம் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அந்த முடிவுகளை சமர்ப்பித்துள்ளோம். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில்தான், லலிதா ஜூவல்லரி வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், திருவாரூர் மாவட்ட பாஜக பொருளாளராக உள்ளார் எனக் கூறி வதந்தி பரப்பி வருகின்றனர்.
இந்த தகவல் தவறானதாகும். மணிகண்டன் திருவாரூரை சேர்ந்தவர் ஆவார். லலிதா ஜூவல்லரி திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதால், திருவாரூரை சேர்ந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியுடன் தொடர்புபடுத்தி பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் திமுக., கூட்டணி ஆதரவாளர்கள், அந்த மணிகண்டனை பாஜக பொருளாளர் எனக் கூறி, தகவல் பரப்பி வருகின்றனர். இப்படி திமுக ஆதரவு கட்சியினரும், பாஜக ஆதரவு கட்சியினரும் மாறி மாறி தங்களது சுய அரசியல் தேவைக்காக, மணிகண்டனை பாஜக., நபர், திமுக நபர் எனக் கூறி விதவிதமாக வதந்தி பகிர்கின்றனர். அதில் ஒன்றுதான் மேற்கண்ட வதந்தியும். இதனை முதல்முதலில் ட்விட்டரில்தான் தொடங்கி வைத்தனர். அந்த பதிவின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்ட பாஜக.,வினரிடம் விசாரித்தபோது, இப்படி எந்த நபரும் பாஜக.,வில் இல்லை எனக் கூறி மறுப்பு தெரிவித்தனர். எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி ஒரு தவறான வதந்தி என உறுதி செய்யப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் பட்டியல் பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு கட்சி சார்ந்த நபர்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க் வைத்துக் கொண்டு ஒவ்வொரு அன்றாட நிகழ்வுகளிலும் தங்களது அரசியல் கருத்துகளை திணித்து, அதன் உண்மைத்தன்மை தெரியாத அளவுக்கு பொதுமக்களை குழப்பி வருவது அதிகரித்துள்ளது. அதற்கு, மேலே உள்ள வதந்தி ஒரு சிறந்த உதாரணமாகும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பாஜக பொருளாளர் கைது: உண்மை அறிவோம்!
Fact Check By: Pankaj IyerResult: False
