
உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் என்று படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பத்தோடு இறந்து கிடப்பவர்கள் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர். ஒளிவிளக்கை ஒன்பது நிமிடங்கள் ஒளிர விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Al Muslima என்ற ஃபேஸ்புக் ஐடி-யை கொண்ட நபர் 2020 ஏப்ரல் 5ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்படவில்லை என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் அரசின் உதவி கிடைக்காததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள குடும்பத்தினர் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக உயிரிழந்தார்களா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஓராண்டுக்கு முன்பு இந்த புகைப்படம் செய்தி ஊடகங்களில் வெளியானது தெரிந்தது. janata.news என்ற இணையதளம் இந்த படத்தில் உள்ளவர்களின் முகத்தை மறைத்து 2019 ஜூன் 18ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
கன்னடத்திலிருந்த அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் தாய் ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளை தண்ணீர் அழுத்தி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
sakshi.com | Archived Link | Search Link |
sakshi.com என்ற இணையதளம் இந்த புகைப்படத்தை அப்படியே வெளியிட்டிருந்தது. அதில், கணவனின் குடிபோதை காரணமாக மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
கர்நாடகா மாநிலம், கொப்பல்லா, மூன்று குழந்தைகள் கொலை, பெண் தற்கொலை ஆகிய கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது 2019 ஜூன் 19ம் தேதி தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில் கொலை மற்றும் தற்கொலை செய்தியை குறிப்பிட்டிருந்தனர். காவல் நிலையம், கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெயர் அந்த கன்னட செய்தியில் உள்ளதுடன் ஒத்துப்போனது.
sakshi.com | Archived Link 1 |
thehindu.com | Archived Link 2 |
இதன் மூலம் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடகாவில் நடந்த சம்பவத்தின் புகைப்படத்தை எடுத்து, உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு காரணமாக உணவு இல்லாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டனர் என்று தவறான தகவலை பரப்பி வருவது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False

Thank you for good information….continue