
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தொடர் போன்ற இடத்தில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கல்வான் பள்ளத்தாக்கில் இராணுவ வீரர்களின் மத்தில் பேசிய படம்.. சீனா இந்த இடத்தை தங்கள் இடம் என்று அறிவித்து 3 நாட்களாகியும் மறுப்பு தெரிவித்து இது இந்தியப் பகுதி என்று சொல்லாத கோழை மத்திய அரசை பெற்றிருப்பது இந்தியாவின் சாபக்கேடு.. அதானி, அம்பானியின் சீன முதலீடுகளை காப்பாற்ற இந்திய நிலத்தை சீனாவிற்கும் ஒரு புரோக்கரை பெற்றது இந்தியாவின் துரதிர்ஷ்டம்…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Vijaya Raj என்பவர் 2020 ஜூன் 22ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது லடாக் கல்வான் பள்ளத்தாக்குக்கு சென்று பேசினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்க அசல் போல உள்ளது. நாட்டின் பிரதமர்கள் இந்தியாவின் எல்லையில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களை சந்தித்து பேசுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. ஆனால், கல்வான் பள்ளத்தாக்கு என்பது சீனாவின் அத்துமீறலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் பிரபலமான இடம். சீனா தற்போது சொந்தம் கொண்டாடும் அந்த பகுதிக்கு இந்திரா காந்தி துணிச்சலுடன் சென்று வந்தார் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் எல்லைக்கு பிரதமர் செல்வது வழக்கமான ஒன்று என்றாலும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றதாக கூறுவது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது பல மொழிகளிலும் இந்த புகைப்படம் தொடர்பாக முன்னதாகவே உண்மை கண்டறியும் ஆய்வை நடத்திக் குவித்திருப்பது தெரிந்தது.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவின் சில பிரிவுகள் கூட இது தொடர்பாக ஆய்வு நடத்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. தேடத் தேட உண்மைக் கண்டறியும் ஆய்வுகளாக வரவே, கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது 2015ம் ஆண்டு வெளியான பதிவு ஒன்று கிடைத்தது.
அதில், திருமதி இந்திரா காந்தி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றுகிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எங்கு, எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை.
தொடர்ந்து தேடியபோது 1971ம் ஆண்டு லே-வில் ராணுவ வீரர்கள் மத்தியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பேசினார் என்று ஒரு பதிவில் இந்த படத்தைப் பகிர்ந்திருந்தனர். லே என்பது லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பகுதி. லேவுக்கும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் எவ்வளவு தூரம் என்று பார்த்தபோது 200 கி.மீக்கு மேல் பயணம் தூரம் இருப்பது தெரிந்தது. எனவே, ஒரே மாநிலமாக இருந்தாலும் இடம் என்பது வேறு வேறு என்பது தெரிந்தது.
ட்விட்டரில் இந்திரா காந்தியின் மீது பற்றுகொண்ட Rachit Seth என்பவர் “இந்த புகைப்படம் லே-வில் எடுக்கப்பட்டது; கல்வானில் எடுக்கப்பட்டது இல்லை. 2012ம் ஆண்டுக்கு முன்பு இந்திரா காந்தியை நினைவு கூறும் வகையில் பிடிஐ செய்தி நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தது” என்று கூறியிருந்தார்.
மேலும் தன்னிடம் உள்ள இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள் தொகுப்பில் குறிப்பிட்ட இந்த புகைப்படம் இருப்பதையும் வெளியிட்டிருந்தார். மேலும் இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் 2009ம் ஆண்டு வெளியிட்டிருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பிடிஐ- புகைப்படங்களில் இந்த படம் உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
பிடிஐ இணையதளத்தில் இந்திரா காந்தி லே -வில் வீரர்கள் மத்தியில் பேசிய படம் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடியபோது குறிப்பிட்ட இந்த புகைப்படம் இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் தற்போது பிரச்னைக்குரிய லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:Fact Check: கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
