இந்திய ராணுவம் கொன்ற 55 பேரின் பெயர் விவரத்தை சீனா வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’இந்திய ராணுவம் கொன்ற சீன ராணுவத்தினர் 55 பேரின் பெயர் விவரத்தை அந்நாடு வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், சீன ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு, அணிவகுப்பு மரியாதை மற்றும் பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களை இணைத்துள்ளனர். இதன் மேலே, இந்தியாவால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் 55 பேரின் பட்டியலை வெளிப்படையாக சீனா வெளியிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்களை கூர்ந்து கவனித்தபோது, அவை ஒவ்வொன்றுமே பழைய புகைப்படங்களாக இருந்த விவரம் தெரியவந்தது. 

இதுதொடர்பான நிறைய புகைப்படங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம். 

இந்த புகைப்படங்களை சீன அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம், கடந்த 2019ம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறது. 

இந்த புகைப்படங்கள், சீன – கொரிய போரின்போது (1950 ஜூன் 25) உயிரிழந்த சீன வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் எடுக்கப்பட்டவை ஆகும்.

இது மட்டுமின்றி, இவர்கள் குறிப்பிடும் பெயர் பட்டியல் உண்மையா என விவரம் தேடினோம். இதன்படி, இந்த பெயர் விவரத்தை ட்விட்டரில் சிலர் உண்மை போல பகிர, அது படிப்படியாக மற்ற சமூக வலைதளங்களுக்கும் பரவி வருவதைக் காண முடிகிறது.

Archived Link

இதை வைத்தே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவிலும் இந்த பெயர்ப்பட்டியலை இணைத்துள்ளனர். உண்மையில், இது தவறான தகவலாகும்.

எல்லையில் இந்தியா – சீன வீரர்களிடையே நடைபெற்ற மோதலின் பின்னணியில் பல விதமான வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதில், ஒன்றுதான் சீன ராணுவத்தினர் 55 பேர், இந்தியாவால் கொல்லப்பட்டனர் என்ற செய்தியும். முதலில், இந்தியாவைச் சேர்ந்த ஊடக நிறுவனங்கள் ஆதாரமின்றி, 5 சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்றும், சில மணிநேரம் கழித்து 30 பேர், அப்புறம் 43 பேர் கொல்லப்பட்டனர் என்றும், மாறி மாறி செய்தி வெளியிட்டன.

இதன்பேரில், சிலர் தற்போது 55 மற்றும் 56 சீன ராணுவத்தினர் பலி என்றும் தகவல் பகிர்கின்றனர். ஆனால், இந்த தகவலை முதலில் வெளியிட்டவர் Global Times பத்திரிகையாளர் ஒருவர்தான். அவர், லடாக்கில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 சீன ராணுவத்தினர் காயமடைந்தனர் என்றும், 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Archived Link

இதையடுத்தே இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட, பிறகு அதனை மற்றவர்கள் தங்களது கற்பனைக்கு ஏற்ப எண்ணிக்கையை சேர்த்துக் கொண்டனர்.

அதேசமயம், குறிப்பிட்ட தகவலை Global Times அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. தங்களது நிறுவனம் சார்பாக இந்த தகவலை வெளியிடவில்லை என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, Global Times செய்தி ஆசிரியரும் இதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார். சீனா தரப்பில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றி சீன அரசு வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில், Global Times என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமாகும்.

இறுதியாக, இவர்கள் குறிப்பிடும் பெயர்ப்பட்டியல் எது என்று பார்த்தால், அது விக்கிப்பீடியாவில் வரும் ஒரு தகவல் பற்றியதாகும்.

விக்கிப்பீடியா இணையதளத்தில் List of generals of the People’s Republic of China என்ற பட்டியல் தரப்பட்டுள்ளது. அதில் உள்ள பெயர்களை எடுத்து, இந்தியாவால் கொல்லப்பட்ட சீனப் படையினர் என்று கூறி தவறான தகவலை பகிர்ந்துள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் பெயர் விவரம் உள்ளிட்டவை தவறான தகவல் என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்திய ராணுவம் கொன்ற 55 பேரின் பெயர் விவரத்தை சீனா வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False