
45 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மலர் போல தோற்றம் அளிக்கும் ஒன்றில் அருகே நல்ல பாம்பு படம் எடுத்தபடி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாகபுஷ்பா சுமார் 45 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படுகிறது.. பார்த்தவுடன் ஓம் என்று சொல்லுங்கள்.. நல்லதே நடக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ஓம் சக்தி ஸ்ரீ மாதா லலிதாம்பாள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Hariharan Hari என்பவர் 2020 செப்டம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
100 ஆண்டுக்கு, 200 ஆண்டுக்கு மலரும் மலர் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. அப்படி அபூர்வமான மலர்கள் எதுவும் இல்லை என்று ஏற்கனவே பல கட்டுரைகளில் தெரிவித்துள்ளோம். இந்த நிலையில் இந்த பதிவில் கூறப்பட்டது போன்று இது அபூர்வமான மலரா என்று ஆய்வு செய்தோம்.
தரையிலிருந்து வளர்ந்தது போல உள்ளது. இது செடியா, மலரா அல்லது வேறு ஏதாவதா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, மலர் என்று கூறப்படும் படத்தையும் பாம்பையும் போட்டோஷாப் முறையில் இணைத்துப் பதிவிட்டிருப்பது தெரிந்தது.
அதே நேரத்தில் கடலில் காணப்படும் அற்புதம் என்று பலரும் இந்த படத்தை பதிவிட்டு வந்திருப்பதை காண முடிந்தது. மேலும், கடல் பேனா என்று இதை குறிப்பிட்டு சில பதிவுகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது.
அதன் அடிப்படையில் தேடிய போது, இது கடலின் மிக ஆழத்தில் வெளிச்சம் இல்லாத பகுதியில் வளரும் ஒரு வகையான பவழ பாறை (பூச்சி வகை) என்பது தெரிந்தது. அந்த காலத்தில் மையைத் தொட்டு எழுதும் பழக்கம் இருந்தது. இதற்காக இறகுகளைப் பேனா போல பயன்படுத்தினர். அதனால், இந்த பவழ பாறைக்கு ‘கடல் பேனா‘ என்று பெயர் வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
பிபிசி வெளியிட்டிருந்த வீடியோவில் இந்த பவளப் பாறை எப்படி வளர்கிறது, எதிரிகளிடமிருந்து தப்பிக்க எப்படி மண்ணுக்குள் மறைகிறது என்று விளக்கியிருந்தனர். இது பவளப் பாறை என்பதற்கான பல ஆதாரங்கள் நமக்கு கிடைத்தன.
இந்த கடல் பேனா பற்றி பிரிட்டானிக்கா களஞ்சியத்தில், “கடல் பேனாவில் 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. காலனித்துவ (எறும்பு, கரையான் போல) முதுகெலும்பு இல்லாத கடல் விலங்கு. துருவ கடல் பகுதியில் இருந்து வெப்பமண்டல கடல்பகுதி வரை ஆழமற்ற மற்றும் ஆழமான கடல் பகுதியில் காணப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர். இது விலங்கு வகையில் வரும் என்பதால் 45 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படும் புஷ்பம் (மலர்) என்று கூறுவது தவறான தகவல் என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில், ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் கடல் பேனா எனப்படும் பவளப் பாறையின் படம் என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில், கடல் பேனா படம் மற்றும் நாகத்தின் படத்தை இணைத்து, 45 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பா என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:45 ஆண்டுக்கு ஒரு முறை காணப்படும் நாகபுஷ்பா என்று பகிரப்படும் பவளப் பாறையின் புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: False
