
‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim 1 | Archived Link |
Facebook Claim 2 | Archived Link |
Facebook Claim 3 | Archived Link |
Facebook Claim 4 | Archived Link |
Facebook Claim 5 | Archived Link |
Facebook Claim 6 | Archived Link |
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவைப் போல, மேலும் பலரும் பிரக்யாவின் இன்றைய நிலை என்று கூறி இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். இவர், பாஜக மாணவர் பிரிவில் (ABVP) சேர்ந்து, பிறகு ஆர்எஸ்எஸ் வழியாக, பாஜகவில் இணைந்து, அரசியல் செல்வாக்கு மிக்க நபராக வலம்வருகிறார். பல சர்ச்சைகளும் இவரது பின்னணியில் உள்ளன. குறிப்பாக, 2008ம் ஆண்டில் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது, இவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவான விசயமாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், சமீப நாட்களாக, இவருக்கு உடல்நலம் சரியில்லை என தகவல் பரவி வருகிறது. அதையொட்டியே மேற்கண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
ஆனால், இந்த புகைப்படம் மிகப் பழையதாகும்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் உடல்நிலையை காரணம் காட்டி வந்த பிரக்யா சிங் தாக்கூர், அதற்காக, மருத்துவ சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதில் ஒன்றுதான் மேற்கண்ட புகைப்படமும். இது கடந்த சில ஆண்டுகளாகவே, இணையத்தில் ஃபைல் புகைப்படமாக பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது பிரக்யா சிங்கின் தற்போதைய புகைப்படம் இல்லை என்று தெளிவாகிறது.
தற்சமயம், பிரக்யாவை காணவில்லை என்று கூறி அவரது போபால் நாடாளுமன்ற தொகுதியில் எதிர்க்கட்சியினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதனால், பெரும் சர்ச்சை எழுந்ததால், பாஜக தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அதில், அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கண் பார்வைக் கோளாறு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார் என்று, தெரிவிக்கப்பட்டது.
இதனை உறுதி செய்யும் வகையில் பிரக்யா சிங்கும் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ செய்தியில், இடது கண்ணில் கட்டு போடப்பட்டுள்ள நிலையில் பேசும் பிரக்யா, தனக்கு தலையில் சிறிய வீக்கம் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், இது மட்டுமின்றி கண்ணில் பார்வை பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பிரக்யா சிங் தாக்கூர் பேசுவதைக் காண முடிகிறது.
எனவே, பிரக்யா சிங் தாக்கூர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான்; ஆனால், இதுதொடர்பாக பகிரப்படும் புகைப்படம் பழையது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி பழைய புகைப்படத்தை தற்போதைய நிகழ்வுடன் சேர்த்து தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
