பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு, கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள் என்று நியூஸ் 18 தமிழ் நாடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Article LinkArchived Link 2

கல்லறை ஒன்றில் தொழிலாளி பள்ளம் தோண்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஏராளமான பள்ளங்கள் தயார் நிலையில் இருக்கிறது. "பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு... கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள்!" என்று தலைப்பிட்டு செய்தியை பகிர்ந்துள்ளனர்.

இந்த செய்தியை நியூஸ்18 தமிழ்நாடு தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை தன்னுடைய News18 Tamil Nadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஏப்ரல் 2ம் தேதி பகிர்ந்துள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா அச்சம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், அது பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. செய்தி ஊடகங்களிலும் மக்களை பீதிக்குள்ளாக்கும் செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன.

நியூஸ் 18 தமிழ்நாடு கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கல்லறையில் ஏராளமான பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக படத்தை பகிர்ந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவக்கூடிய வாய்ப்புள்ளதால் அரசாங்கமே அவர்களின் இறுதி அடக்கத்தை மேற்கொள்கிறது.

மிகவும் பாதுகாப்பான முறையில் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த காட்சியைப் பார்க்கும்போது உடல்கள் அடக்கம் பாதுகாப்பானது போல தெரியவில்லை. எனவே, பழைய படத்தை எடுத்து தற்போது கொரோனா பீதியை பயன்படுத்தி வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

முதலில் செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தோம். செய்தியில், தலைப்பில் கல்லறை காட்சிகள் என்று குறிப்பிட்டிருந்தனர். செய்தியினுள் ஒரே ஒரு படம் தான் இருந்தது. எனவே இந்த படம் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வெட்டப்பட்டது என்றே குறிப்பிடுகின்றனர்.

செய்தியின் உள்ளே, "லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய கல்லறையைக் கொண்ட அந்நகரத்தில் கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் இறப்பு எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கவசம் அணிந்த ஊழியர்கள் உயிரிழந்த ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது நூற்றுக் கணக்கில் அங்கு வெட்டி வைக்கப்பட்டுள்ள குழிகள் கொரோனா உயிரிழப்பு குறித்த அச்சத்தை விதைத்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இந்த படம் தற்போது கொரோனா பாதிப்பு நேரத்தில் எடுக்கப்பட்டது என்று உறுதியாக குறிப்பிட்டுள்ளனர்.

Search Link

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. அந்த செய்திகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தோம். 2017ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி voanews.com என்ற இணையதளம் இந்த படத்தை வெளியிட்டிருந்தது. அதில், பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் கொள்ளப்பட்ட மக்களுக்கு கல்லறைகள் தயாரிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தனர்.

voanews.comArchived Link

படத்தில் ராய்டர்ஸ் என்ற செய்தி ஊடகத்தின் லோகோ இருந்தது. எனவே, ராய்டர்ஸ் வெளியிட்ட அசல் படத்தை அதன் இணையதளத்தில் தேடினோம். அப்போது 2017ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இந்த படத்தை ராய்டர்ஸ் நிறுவனம் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது.

பிரேசில் சிறை கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்காக தொழிலாளி ஒருவர் கல்லறையை உருவாக்குகிறார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

pictures.reuters.comArchived Link

இதன் மூலம், 2017ம் ஆண்டு வெளியான பிரேசில் சிறை கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு வெட்டப்பட்ட சவக்குழி படத்தை எடுத்து கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களுக்காக நூற்றுக்கணக்கில் வெட்டப்பட்டுள்ள குழிகள் என்று பகிர்ந்திருப்பதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த செய்தி தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபித்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனா கல்லறை காட்சி; நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False