திப்பு சுல்தான் என்று கூறி பகிரப்படும் தான்சானியா நபரின் புகைப்படம்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

திப்பு சுல்தானின் அசல் படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

படம் ஒன்றை வீடியோ வடிவில் பகிர்ந்துள்ளனர். அதில், “பாட புத்தகங்களில் திப்பு சுல்தான். உண்மையில் திப்பு சுல்தான்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், திப்பு சுல்தான் உண்மை முகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Dinesh Yadav என்பவர் 2020 மே 11ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இது போன்ற படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திப்பு சுல்தான் காலம் என்பது 1750 முதல் 1799 வரை. அப்போது புகைப்படக் கருவியே கண்டறியப்படாத நிலையில், திப்பு சுல்தான் படத்தை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழவே, இது யாருடைய படம் என்று ஆய்வு செய்தோம்.

முதலில் புகைப்படக் கருவி எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்று பார்த்தோம். 1800களின் தொடக்கத்தில் புகைப்பட கருவி கண்டுபிடிப்பு நடந்தது. 1826ம் ஆண்டு உலகின் முதல் புகைப்படம் பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிக்கோஃபோர் நிப்ஸால் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. திப்பு சுல்தான் இறந்து 27 ஆண்டுகள் கழித்துதான் உலகின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடியபோது, இது தான்சானியா நாட்டைச் சேர்ந்த அடிமைகள் வணிகர் ஒருவரின் புகைப்படம் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் ஹமீத் பின் முஹமது பின் ஜுமா பின் எனப்படும் திப்பு திப் என்று கூறப்பட்டு இருந்தது. 

sciencesource.comArchived Link

வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது கெட்டி இமேஜில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நபரைப் போன்ற உருவ ஒற்றுமை உள்ள நபர் கிடைத்தார். கெட்டி இமேஜ் அவரை திப்பு திப் என்ற அடிமை வியாபாரி என்றே குறிப்பிட்டிருந்தது. 

gettyimages.inArchived Link

திப்பு திப் என்ற பெயரில் உள்ள அடிமைகளை வணிகம் செய்த நபர் இருந்தாரா என்று தேடிய போது விக்கிப்பீடியாவில் ஒரு தகவல் கிடைத்தது. அதில் உள்ள நபருக்கும் மேலே உள்ள திப்பு திப் என்று கூறியவருக்கும் உருவ ஒற்றுமை பொருந்தவில்லை.

face2faceafrica.comArchived Link

அதே நேரத்தில் ராமாலிசா என்ற மற்றொரு அடிமை வணிகத்தில் ஈடுபட்ட நபருடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நபரின் புகைப்படம் ஒத்துப் போனது. அதே நேரத்தில் கெட்டி இமேஜ் படத்தில் விக்கிப்பீடியில் திப்பு திப் என்று கூறப்படுபவரும், மற்றொரு அடிமை வியாபாரியான ராமாலிசாவும் ஒன்றாக அமர்ந்திருப்பதை காண முடிகிறது. 

இதன் அடிப்படையில் தான்சானியாவில் அடிமை வியாபாரம் செய்து வந்த திப்பு திப் என்று கூறி கெட்டி இமேஜஸ் உள்ளிட்ட முன்னணி புகைப்பட விற்பனை இணைய தளங்களில் உள்ள புகைப்படத்தை எடுத்து, அதை இந்தியாவின் திப்பு சுல்தான் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திப்பு சுல்தான் என்று கூறி பகிரப்படும் தான்சானியா நபரின் புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False