நாடாளுமன்றத்தில் அம்பேத்கருக்கு சிலை வைத்தாரா மோடி?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை அமைத்தது பிரதமர் மோடி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கால் மேல் கால் போட்டு அம்பேத்காருக்கு சிலை வையித்தது யாரு..?

பிரதமர். #நரேந்திரமோடி…

மத்திய அரசால் இணையதளம் மூலம் பணம் அனுப்பும் செயலிக்கு அம்பேத்கரை பெருமைப்படுத்தும் வகையில் “பீம்” ஆஃப் ன்னு பெயரை வச்சது யாரு.?

பிரதமர். #நரேந்திரமோடி …

இந்தியாவிலேயே மிக உயர்ந்தப் பதவியான ஜனாதிபதியாக ஒரு பட்டியல் இனத்தவரை உக்கார வைத்து அவர்களுக்கு சிறப்பு செய்தது யாரு..?

பிரதமர். #நரேந்திரமோடி…

அப்பறம் அம்பேத்கரை பிஜேபிக்காரன் கொண்டாடாமல் வேறு யாருடா கொண்டாடுவா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தேசிய தமிழன் அண்ணாமலை என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஏப்ரல் 16ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் இந்த அம்பேத்கர் சிலை நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டது இல்லை. டெல்லியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் இன்டர்நேஷனல் சென்டரில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிலையைப் பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார். எனவே, இந்த சிலை இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளதா அல்லது டாக்டர் அம்பேத்கர் இன்டர்நேஷனல் சென்டரில் உள்ளதா என்றும், நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை அமைத்தது யார் என்றும் ஆய்வு செய்தோம்.

Archive

இந்த சிலை டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைந்துள்ளது என்பதை உறுதி செய்ய ஆதாரங்களைத் தேடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது, 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்த போது அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகமும் இந்த படத்தை அப்போதே ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தது.

டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் இணையதளத்தைப் பார்வையிட்டோம். அதிலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்பேத்கர் புகைப்படம் இருந்தது. அம்பேத்கர் சிலைக்கு பின்புறம் தொடக்கத்தில் வெறும் கண்ணாடி சுவர் இருந்துள்ளது. தற்போது, அதில் நாடாளுமன்றத்தின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. பார்க்க நாடாளுமன்றத்தின் முன்பாக இந்த சிலை இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தியது. ஆனால், பின்னணியில் இருப்பது நாடாளுமன்ற கட்டிடம் இல்லை, புகைப்படம் மட்டும்தான். இதன் மூலம் இந்த புகைப்படம் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டது இல்லை என்று உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: daic.gov.in I Archive

சரி, டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளதா என்று பார்த்தோம். நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் அந்த மையம் அமைந்திருப்பது கூகுள் மேப் மூலம் தெரியவந்தது.

அடுத்ததாக, நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை தொடர்பாக ஆய்வு செய்தோம். நாடாளுமன்ற வளாகத்தில் கையை நீட்டியபடி அம்பேத்கர் நிற்கும் சிலை மட்டும் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்த சிலையும் 1967ல் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் என்று தகவல் கிடைத்தது. நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் உருவப் படத்தை 1990ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் திறந்துவைத்தார் என்றும் செய்தி கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: rajyasabha.nic.in I Archive 1 I loksabha I Archive 2

இதன் மூலம் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை, நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டது என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தக்கவரான தகவல் கலந்த பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை அமைத்தது மோடி என்று பரவும் தகவல் தவறானது என்றும், பகிரப்படும் படம் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அமைக்கப்பட்டது என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நாடாளுமன்றத்தில் அம்பேத்கருக்கு சிலை வைத்தாரா மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply