ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் இதனால் உண்மை தெரியும் வரை அந்த கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

தாமரைக்கண்ணா என்பவர் 2019 மே 29ம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதனால், உண்மை தெரியும் வரை இழுத்து மூட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மை என்று கருதி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மே 26ம் தேதி மாணவி ஒருவர் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்த நாள், முதலாம் ஆண்டு படித்து வந்த ஜார்கண்டை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து இரண்டு பேர் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு அதிர்ச்சி மரணங்கள் தொடர்பாக எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம் தரப்பில் பல்கலைக் கழக பதிவாளர் சேதுராமன் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், “இறுதி ஆண்டு மாணவி ஒருவர் தன் சொந்த வாழ்க்கை பிரச்சினை காரணமாக தன் உயிரைநீத்துள்ளார். அதே போல் இன்னொரு மாணவர்‌ முதல் பருவத்தில் 7 பாடங்களிலும் இரண்டாம் பருவத்தில் 4 பாடங்களிலும் தோல்வியடைந்து இருந்ததால் விடுதியில் நண்பர்கள் துணையின்றி தனியே இருந்து தேர்வு எழுதுவது குறித்த கவலையிலும் மனச் சோர்விலும் தன் உயிரை நீத்துக் கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தாமரைக் கண்ணா என்பவர் மூன்று மாணவிகள் மர்ம மரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு ஆதாரத்தையும் அவர் அளிக்கவில்லை.

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து சமீபத்தில் தி.மு.க கூட்டணியில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து அவரைப் பற்றி பல்வேறு அவதூறு தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாணவி மற்றும் மாணவர் ஒருவர் தற்கொலையை மிகைப்படுத்திப் பதிவிட்டதுபோல் இருந்தது.

தாமரைக்கண்ணாவின் பின்னணி விவரங்களை ஆய்வு செய்தோம். தன்னுடைய அரசியல் பார்வை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், பதிவுகள் எல்லாம் பா.ஜ.க சார்பு தன்மை உடையதாக இருந்தது. மேலும், அவருடைய கவர் போட்டோவில், "தேசம் காக்க ராணுவத்தில் சேர முடியவில்லை. ஆனால், மோடிஜியுடன் சேர்ந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SRM 2.png

பல பதிவுகள் பொதுவெளியில் குறிப்பிட முடியாத ரகத்தை சார்ந்ததாக அசிங்கமாக, ஆபாசமாக, வக்கிரம் நிறைந்ததாக இருந்தது. இதன் மூலம், தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றததை பொறுத்துக்கொள்ள முடியாமல் விஷமத்தனத்துடன் பதிவிட்டது உறுதியாகிறது.

Archived link

தற்கொலை செய்துகொண்ட மாணவி குடியரசு தலைவருக்கு மனு ஏதேனும் அனுப்பியிருந்தாரா என்று அறிய, மறைமலைநகர் போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய இன்ஸ்பெக்டர், “ஒரு மாணவி, ஒரு மாணவர் என இரண்டுபேர் தற்கொலை செய்துள்ளனர். மூன்று மாணவிகள் மரணம் என்று சொல்வதே முட்டாள்தனம். யாரோ அடிப்படை உண்மை தெரியாத நபர், பரபரப்புக்காக இப்படி வதந்தியைப் பரப்பியுள்ளார். மாணவி தன் குடும்ப பிரச்னை காரணமாக தன்னுடைய தந்தைக்கு 6 பக்க கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துள்ளார். பொய்யான தகவலைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவிகள் மரணமடைந்ததாக கூறிய தகவல் தவறு. ஒரு மாணவி, ஒரு மாணவர் என இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

குடும்ப பிரச்னை காரணமாகவும் தேர்வில் தோல்வி காரணமாகவும் தற்கொலை நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில்தான் முழு விவரம் வெளிவரும்.

மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் உயிரிழந்ததாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை கிடைத்துள்ளது.

மூன்று மாணவிகள் மரணம் என்பது அடிப்படையே இல்லாத முட்டாள்தனமான பொய் என்று மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவிகள் மரணம் என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று கல்லூரி மாணவிகள் மர்ம மரணம்? விஷமத்தமான ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Praveen Kumar

Result: False