
‘’தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது,’’ என்று செல்லூர் ராஜூ பேசியதாக, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
Bright Singh
என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை செப்டம்பர் 23, 2019 அன்று வெளியிட்டுள்ளார். நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே இருப்பதால், இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கமாகும். அவர் கடந்த 2017ம் ஆண்டு வைகை அணையை தெர்மோகோல் போட்டு மூடினால் நீர் வீணாக ஆவியாகாது என்று கூறி, அந்த திட்டத்தை செயல்படுத்தியதன் மூலமாக, கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இந்நிலையில் சமீபத்தில் பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘’யார் யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அங்கே உட்கார வைத்தால் எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும்,’’ என்று கூறினார். அவர் பேசிய வீடியோ காட்சி கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.
விஜயின் பேச்சு பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை நேரடியாக விமர்சிப்பதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டது. இதையடுத்து, இதுபற்றி தமிழக அரசு சார்பாக, அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த செப்டம்பர் 22 அன்று ஊடகத்தினருக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில், நடிகர் விஜய் அதிக சம்பளம் வாங்குவதால், மக்களின் ஆர்வத்தை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறியிருந்தார். அத்துடன், எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவும் அவரவர் இடத்தில் சரியாகத்தான் உள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. இது உண்மையா என அறிந்துகொள்ள முதலில் கூகுளில் செய்தி ஆதாரம் தேடினோம். ஆனால், அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு செப்டம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அன்றைய நிலவரத்தின்படி பார்த்தால் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி மேலே உள்ள வீடியோதான். அதில் அவர் பெட்ரோல், டீசல் விலை பற்றி எதுவும் பேசவில்லை.
இதையடுத்து நியூஸ் 7 தொலைக்காட்சி இப்படி எதுவும் செய்தி வெளியிட்டதா, என அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
மேற்கண்ட புகைப்படத்தை Fotoforensics இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அதில் மேற்கண்ட புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என தெரியவருகிறது.

இதன்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று எனவும், அமைச்சர் ராஜூ அவ்வாறு பேசவில்லை எனவும் தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு: செல்லூர் ராஜூ பற்றி வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
