FactCheck: இந்த Go Back Modi புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதா?

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பீகார் மக்கள் கோ பேக் மோடி போராட்டம் நடத்தும் காட்சி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

அக்டோபர் 23, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், சாலை ஒன்றின் நடுவே, Go Back Modi என எழுதப்பட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பிரதமர் மோடி வருகைக்கு பீகாரில் வலுக்கும் எதிர்ப்பு. பீகார் மக்கள் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி வீதியெங்கும் Go Back Modi என்று எழுதி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
பீகார் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரசாரப் பணிகள் சூடுபிடித்துள்ளன. பாஜக கூட்டணி இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம், பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஏராளமான தகவல்கள் பகிரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட ஃபேஸ்புக் பதிவும்.

உண்மையில் ‘இந்த புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது கிடையாது,’ என்று நாம் கூகுளில் இதனை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது கண்டோம். ஆம். இது கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட ஒன்றாகும்.

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரது வருகையை எதிர்த்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, கொல்கத்தா நகரின் பல இடங்களில் சாலைகளில் கோ பேக் மோடி என்று எழுதி வைத்தும், பதாகைகள் ஏந்தியும் ஏராளமானோர் போராடியதால், சட்டம், ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

NationalHeraldIndia LinkScroll.in Link 

 அப்போது எடுத்த புகைப்படங்களில் ஒன்றுதான் மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் இருப்பதும். ஆதாரத்திற்காக ஒரு ட்விட்டர் பதிவின் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

இதுதொடர்பாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஊடகங்களில் அப்போதே செய்தி வெளியாகியிருக்கிறது. 

EiSamay Link

இதில், இந்த புகைப்படம் Metro Channel முன்புறம் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் மீண்டும் பெரிதுபடுத்தி பார்த்தபோது, அதில் Metro Channel Control Post Hare Street Police Station என்று எழுதியிருந்ததைக் கண்டோம். 

எனவே, கூகுள் மேப் உதவியுடன் குறிப்பிட்ட இடத்தை தேடிப் பார்த்தோம். அது மிகச் சரியாக கொல்கத்தாவில் உள்ளதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தியது. 

குறிப்பிட்ட பகுதியில் நிறைய போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறி கூகுளில் ஏராளமான புகைப்படங்கள் காண கிடைக்கின்றன. செய்தி லிங்க் ஒன்றை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

The Hindu News Link

எனவே, மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து, இது பீகாரில் நிகழ்ந்ததாகக் கூறி தவறான தகவல் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்ற தெளிவாகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்த Go Back Modi புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False