
கர்நாடகா மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தேர் திருவிழா நடந்தது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பல்லாயிரக் கணக்கானோர் திரண்ட தேர் திருவிழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கர்நாடகம் கலாபராகி மாவட்டத்தில் இன்று நடந்த தேரோட்டத்தில் கூட்டம். கொரோனாவுக்கு காரணம் யார்? ஊடகங்கள் இதை வெளியிடாமல் இருப்பது ஏன்? மத்திய பாஜக அரசின் ஊரடங்கு உத்தரவை கர்நாடக பாஜக அரசு புறக்கணித்து இருக்கிறது. இனி எதாவது சங்கிகள் தப்லீக் பப்ளிக் என பேசட்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கர்நாடக மாநிலம் குல்பர்கா எனப்படும் கலாபுராகி மாவட்டத்தில் உள்ள சித்தலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா 2020 ஏப்ரல் 16ம் தேதி நடந்ததாகவும் அதில் நூற்றுக் கணக்கானவர்கள் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் லட்சக் கணக்கில் திரண்ட கூட்டத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த படம் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மையில் வியாழக்கிழமை காலையில் குல்பர்கா மாவட்டம் சித்தாபூர் தாலுகாவில் உள்ள ராவூர் கிராமத்தில் தேர்த்திருவிழா நடந்துள்ளது. இது தொடர்பாக வாடி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயகுமார் பவாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விழாவில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும், கூட்டம் கூடுவதை சப் இன்ஸ்பெக்டர் தடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக நடைபெறும் திருவிழா கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் சிறப்பு பூஜைகள் மட்டும் செய்ய கோவில் நிர்வாகம் தரப்பில் அனுமதி பெறப்பட்டது. காலையில் 6 மணி அளவில் போலீசார் ஷிப்ட் மாறுதல் நடைபெறும் நேரத்தில் அவசர அவசரமாக தேர் திருவிழாவை கோவில் நிர்வாகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் நிலைத் தகவலில் கூறப்பட்ட தகவல் உண்மைதான் என்பது உறுதியாகிறது.
இருப்பினும் இந்த புகைப்படம் உண்மையில் சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். சமூக ஊடகங்களில் தேர் திருவிழா தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், அதற்கும் படத்துக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிந்தது. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது இந்த படத்தை டெக்கான் ஹெரால்டு 2017ம் ஆண்டு பயன்படுத்தி இருப்பது தெரிந்தது. இதுவும் கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்டதுதான். கோப்பல் மாவட்டத்தில் உள்ள கவிசித்தேஷ்வரா யாத்திரையின்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்ந்து தேடியபோது தமிழ் ஒன் இந்தியா இணைய ஊடகம் இந்த படத்துடன் செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. “இதுதான் லாக்டவுனா? கர்நாடகாவில் தேரை இழுத்த ஆயிரக்கணக்கான மக்கள்! வேடிக்கை பார்த்த போலீஸ்” என்ற தலைப்பிட்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர்.
செய்தியின் உள்ளே எந்த இடத்திலும் இது கோப்பு படம் என்றோ, மாதிரி படம் என்றோ குறிப்பிடவில்லை. இதனால், பலரும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் ஒன்று கூடல் படம் இதுவென நினைத்துப் பகிர்ந்து வந்திருப்பது தெரிந்தது. கடைசியில் அந்த செய்தி அகற்றப்பட்டும் இருந்தது.

நம்முடைய ஆய்வில்,
கர்நாடக மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் தேர் திருவிழா நடந்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட செய்தி கிடைத்துள்ளது.
இந்த திருவிழாவில் 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
விழாவின் வீடியோ பதிவு நமக்கு கிடைத்துள்ளது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.
இந்த படம் கவிசித்தேஷ்வரா யாத்திரையின்போது எடுக்கப்பட்டது என்பதும் இதற்கும் கலாபுராகி கோவில் தேர் திருவிழாவுக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், உண்மையான தகவலுடன் தவறான புகைப்படம் சேர்த்து பகிரப்பட்டு இருப்பதாக, தெரிகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் செய்தி உண்மை, புகைப்படம் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கர்நாடகாவில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற தேரோட்டம்- புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
