ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை என்று கூறினாரா மு.க.ஸ்டாலின்?

அரசியல் சமூக ஊடகம்

ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை. அதற்காக இஸ்லாமிய சகோதரர்களைத் தவறாக சித்தரிக்கக் கூடாது என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியதாக, நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Stalin 2.png
Facebook LinkArchived Link

நியூஸ் 7 தமிழ் 2019 பிப்ரவரி 15ம் தேதி வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நியூஸ்கார்டுடன், சினிமா திரைப்பட காட்சி புகைப்படம் ஒன்று இணைக்கப்பட்டு போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை. அதற்காக இஸ்லாமிய சகோதரர்களைத் தவறாக சித்தரிக்கக் கூடாது – தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு” என்று உள்ளது.

சினிமா காட்சி உள்ள பகுதியில், “இப்படி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு போய் 4 வீடு பிச்சை எடுக்கலாம்” என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த பதிவை Ramasethu Sekaran என்பவர் செப்டம்பர் 13, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் சமயத்தில் இந்த நியூஸ் கார்டு பலராலும் பரப்பப்பட்டது. தி.மு.க தரப்பிலும் சரி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தரப்பிலும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த தகவலைத் தேடினோம்.

முதலில், புல்வாமா தாக்குதல் சமயத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை தேடினோம். அப்போது, தினமலர், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியான மு.க.ஸ்டாலின் அறிக்கை பற்றிய செய்திகள் கிடைத்தன. 2019 பிப்ரவரி 15ம் தேதி இந்த அறிக்கைகள் வெளியாகி இருந்தன.

DinamalarArchived Link 1
DinamaniArchived Link 2

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்தே, நியூஸ் 7 தமிழ் பெயரில் போலியாக நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. நியூஸ் 7 தமிழ் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 15, 2019ம் தேதிக்குச் சென்று அந்த நியூஸ் கார்டை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது என்பதால், ஸ்டாலின் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை மட்டும் ஃபேஸ்புக்கில் டைப் செய்து தேடினோம். 

அப்போது, இந்த பொய் நியூஸ் கார்டு தொடர்பாக நியூஸ் 7 தமிழ் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட பதிவுகள் நமக்கு கிடைத்தன.

Stalin 3.png

முதலில் 2019 பிப்ரவரி 16ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட பதிவைப் பார்த்தோம். அதில், “நியூஸ் 7 தமிழின் அதிகாரப்பூர்வ பக்கத்தைத் தவிர்த்து வேறு பக்கங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டு, மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு படம் ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

Stalin 4.png
Facebook LinkArchived Link

பிப்ரவரி 16ம் தேதி கலைஞர் செய்திகள் வெளியிட்ட பதிவைப் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டை போலி என்று முத்திரை குத்தி பதிவிட்டிருந்தனர். 

நிலைத் தகவலில், “#Fakenews வீரர்களின் மரணம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் இழிவாக பேசியதாக திட்டமிட்டுப் பரப்பப்படும் போலி செய்தி. காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான 44 வீரர்களின் மரணம் பற்றி, திமுக தலைவர் ஸ்டாலின் இழிவாக பேசியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் போலி செய்தி. இது வீரர்களின் மரணத்தில் அரசியல் செய்ய நினைப்பவர்களின் சதிச் செயல்.

Stalin 5.png
Facebook LinkArchived Link

வீரர்களின் மரணம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தேச பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களுடன் திமுக எப்போதும் துணை நிற்கும் என்று குறிப்பிடப்பட்ட இரங்கல் அறிக்கை தான் திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையில் வெளியிட்டது. மற்ற போலி செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

2019 பிப்ரவரியில் பரப்பிய வதந்திக்கு அப்போதே தி.மு.க தரப்பிலிருந்தும் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி தரப்பிலிருந்தும் மறுப்பு தெரிவித்துப் பதிவிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில், யாருக்கும் அது நினைவில் இருக்காது என்ற எண்ணத்தில் மீண்டும் அந்த நியூஸ் கார்டை பரப்ப ஆரம்பித்துள்ளது தெரிகிறது.

நம்முடைய ஆய்வில், நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தி.மு.க தரப்பில் கலைஞர் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை என்று கூறினாரா மு.க.ஸ்டாலின்?

Fact Check By: Chendur Pandian 

Result: False