திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒரு கிறிஸ்தவர்! – விஷம பிரசாரம் செய்யும் ஃபேஸ்புக் பதிவர்கள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுப்பா ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

TTD 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

அந்த பதிவில், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் மாமாவும் கிறிஸ்தவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டியை திருப்பதி தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் தலைமை பதவிக்கு அமர்த்தியிருப்பது கொடுமை. நவாப்கள், வெள்ளையர்கள் ஆட்சியின்போது கூட திருமலை மீது அவர்களை ஏற விடாமல் நிறைய பணம் கொடுத்து நம் முன்னோர்கள் தடுத்தார்கள். ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் ஏமாற்றம் அடைந்து இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவை, 2019 ஜூன் 9ம் தேதி Ponni Ravi என்பவர் வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவராக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்ததுமே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவல் குழு தலைவராக சுப்பா ரெட்டி நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அதனுடன், அவருடைய மதம் தொடர்பான சர்ச்சையும் எழுந்தது.

ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால், சுப்பா ரெட்டியும் கிறிஸ்தவர் தான் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. ஆனால், நான் கிறிஸ்தவன் இல்லை பிறப்பால் நான் ஒரு இந்துதான். ஆண்டுதோறும் சபரிமலை செல்பவன், ஷீரடி சாய்பாபாவின் பக்தன் என்று எல்லாம் சுப்பா ரெட்டி விளக்கம் அளித்தார். ஆனாலும் வதந்திகள் மட்டும் குறையவே இல்லை.

2019 ஜூன் 8ம் தேதி தினமலர் வெளியிட்டிருந்த செய்தியில், ” முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பம் தான், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். ஆனால், அவரது மாமனார் சுப்பாரெட்டி பாரம்பரியமாகவே இந்து தான். இது புதிதல்ல. தற்போதைய திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் புட்டா சுதாகர் யாதவை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்தபோதும், இதேபோன்ற சர்ச்சை எழுந்தது. அவரையும் கிறிஸ்தவர் என்று தான் பொய்யான தகவலை பரப்பினார்கள்” என்கின்றனர் என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகி உள்ளது. அதில், சுப்பா ரெட்டி கிறிஸ்தவர் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்துகொண்டார் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அந்த செய்தியை படித்தபோது, ஓங்கல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஒய்.வி.சுப்பாரெட்டி பங்கேற்றார் என்று குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், எம்.எல்.சி முகுந்த ஶ்ரீனிவாசுலா ரெட்டி உள்ளிட்ட பலரும் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளனர். தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கலந்து கொண்டனர் என்பது போலவே அந்த செய்தி உள்ளது. குடும்பத்துடன் பங்கேற்றனர் என்று இல்லை.

TTD 3.png

சுப்பாரெட்டியின் மதம் தொடர்பான சர்ச்சை எழுந்த போது நம்முடைய மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோ (www.malayalam.factcrescendo.com) உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அந்த ஆய்வில், பலரும் சுப்பா ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தனர். குறிப்பாக, Sampath Varadarajan என்பவர் மிகவும் கொந்தளிப்பாக ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டிருந்ததை காட்டியிருந்தனர். அந்த பதிவில் அவர், “முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் மாமா, டிடிடி தலைவராக நியமிக்கப்பட உள்ளார். என்ன நடக்கிறது இங்கே? தேவாலயம்/வத்திக்கான் தன்னுடைய தலைவராக ஒரு இந்துவை நியமிக்குமா? இந்து ஆலயத்துக்கு எதற்கு கிறிஸ்தவர் தலைமை?” என்று பதிவிட்டிருந்தார். அதில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியை டேக் செய்திருந்தார்.

Archived Link

இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியன் ஸ்வாமி, “சுப்பா ரெட்டி பக்கா இந்து” என்று குறிப்பிட்டிருந்தார். பலரும் சுப்பா ரெட்டி இந்து என்பதற்கு ஆதாரமாக புகைப்படங்களை பதிவிட்டிருந்தனர்.

மேலும், சுப்பா ரெட்டி அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றையும் ஆதாரமாக அளித்திருந்தனர். அதில், அவர் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்வது, தன்னுடைய குடும்பம் இந்து பாரம்பரியம் படி ஒவ்வொரு பூஜையையும் செய்கிறது என்று எல்லாம் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அவர் கிறிஸ்தவர் இல்லை. கிறிஸ்தவர் என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்திருந்தது.

நம்முடைய ஆய்வில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக பதவி ஏற்ற பிறகு அவர் அளித்த பேட்டியில், “நான் கிறிஸ்தவன் கிடையவே கிடையாது” என்று சுப்பா ரெட்டி மனம் திறந்த பேட்டி என்று ஒரு செய்தியும் கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பா.ஜ.க மூத்த தலைவரே விளக்கம் அளித்த பிறகும் எதற்காக இப்படி தொடர்ந்து வதந்தி பரப்பப்படுகிறது என்று, வதந்தியை பரப்பியவரின் பின்னணியை ஆய்வு செய்தோம். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்ட நபர் தொடர்ந்து பல தவறான தகவலை அளித்து வருவது தெரிந்தது. தற்போது, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு வந்துள்ளவர் ஒரு கிறிஸ்தவர் என்ற புரளியைக் கிளப்பிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு இவர்தான், தாய் மதம் திரும்பிய ஜெகன் மோகன் ரெட்டி என்று தவறான செய்தியை வெளியிட்டிருந்தார்.

Archived Link

பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பல தவறான செய்தியை வெளியிட்டு வருகிறார். தமிழச்சி தங்கபாண்டியன் தன்னுடன் அழகுக்கலை நிபுணர் ஒருவரை அழைத்துச் செல்கிறார் என்றும், இந்திரா காந்தி இஸ்லாமியர் என்றும் இவர் வெளியிட்டிருந்த செய்திகள் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

நம்முடைய ஆய்வில்,

சுப்பா ரெட்டி இந்துதான் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உறுதி செய்துள்ள ட்வீட் கிடைத்துள்ளது.

சுப்பா ரெட்டி அளித்த பேட்டி கிடைத்துள்ளது.

சுப்பா ரெட்டி இந்து என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுதி செய்ததாக தினமலர் வெளியிட்டுள்ள செய்தி கிடைத்துள்ளது.

நான் கிறிஸ்தவன் கிடையவே கிடையாது என்று தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு சுப்பாரெட்டி அளித்த பேட்டி கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒரு கிறிஸ்தவர்! – விஷம பிரசாரம் செய்யும் ஃபேஸ்புக் பதிவர்கள்!

Fact Check By: Praveen Kumar 

Result: False