தஞ்சாவூரில் கொரோனா வைரஸ் பாதித்த பெண் புகைப்படம் உண்மையா?

Coronavirus இந்தியா | India சமூக ஊடகம் | Social மருத்துவம் I Medical

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் பிராய்லர் சிக்கனில் கொரோனா வைரஸ் பரவியதாக, இளம் பெண் படத்துடன் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மருத்துவமனையில் கதறி அழும் இளம் பெண்ணின் படங்கள், லாரியில் கொட்டப்பட்ட உணவுப் பொருட்கள், இறைச்சி, பிராய்லர் கோழி படம் என்று 10க்கும் மேற்பட்ட படங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “அவசர செய்தி: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தனல்லூரில் அனைத்து பிராய்லர் சிக்கன் களிலும் கொரோனா வைரஸ் தாக்கியது இதை உடனே அனைவருக்கும் தெரியும் வகையில் பகிருகள் மக்கள் அனைவரும் சிக்கன் சாப்பிட வேண்டாம் என வேண்டிக் கொள்கிரோம் ::Plz forward this message::” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Alifa Fathema என்பவர் 2020 பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த பெண்களின் படத்தைப் பார்க்கும்போது டெல்லியில் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவிகள் போல உள்ளது. தஞ்சாவூரில் என்று இல்லை, தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் பற்றி மத்திய அரசு அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறிப்பிடவே இல்லை. இதேபோல், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பற்றி அவ்வப்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்து வருகிறார். மார்ச் 4ம் தேதி அளித்த பேட்டியில் கூட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறியிருந்தார். 

maalaimalar.comArchived Link

இந்த படங்கள் பற்றி முதலில் ஆய்வு மேற்கொண்டோம். இளம் பெண்கள் படம் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவிகள்தானா என்று உறுதி செய்யப் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இது ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டபோது எடுத்தது என்பதை உறுதி செய்வதற்கான செய்திகள் மற்றும் பிப்ரவரி 10, 2020ல் வெளியான ட்விட் பதிவுகள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் இந்த பெண்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பது உறுதியானது.

countercurrents.orgArchived Link 1
twitter.comArchived Link 2

அடுத்ததாக பிராய்லர் கோழி, லாரியில் கொட்டப்பட்ட கோழி இறைச்சி உள்ளிட்ட படங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது ஆந்திராவில் சிக்கனில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்று பரவிய வதந்தி தொடர்பாக நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வு முடிகள் நமக்கு கிடைத்தன. உணவைப் பரிசோதிக்கும் படம், கோழி படம் என எல்லாம் அதிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. கோழி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று பரப்பப்படும் தகவல் உண்மை இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெலங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டது உள்ளிட்ட பல தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

hoaxorfact.comArchived Link

இதன் மூலம் மருத்துவமனையில் உள்ள பெண்கள் படம் தவிர்த்து மற்ற அனைத்தும் தெலங்கானாவில் வேகமாகப் பரவி வந்த வதந்தியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதும் உறுதியானது.

உண்மையில் கொரோனா வைரஸ் சிக்கன், மட்டன் மூலமாக பரவுமா, அது தொடர்பாக ஆய்வு ஏதும் நடந்துள்ளதா என்று தேடிப்பார்த்தோம். அப்போது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (Food Safety and Standards Authority of India) தலைவர் ஜி.எஸ்.ஜி.ஐயங்கார் அளித்த பேட்டி தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில் “கொரோனா வைரஸ் சிக்கன், மட்டன், கடல் உணவு மூலமாக பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை. மேலும், இந்தியாவின் அதிகப்படியான வெப்பநிலையும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏற்றபடி இல்லை. எனவே அச்சம் வேண்டாம்” என்று கூறியிருந்தது நமக்கு கிடைத்தது.

economictimes.indiatimes.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி கிடைத்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள பெண்கள் படம் டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக தாக்குதல் தொடர்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிராய்லர் சிக்கன், லாரியில் கொட்டப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் படம் தெலங்கானாவில் பரவிய வதந்தியிலிருந்து எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிக்கன், மட்டன், கடல் உணவு மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய தலைவர் அளித்த பேட்டி கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் கொரோனா வைரஸ் தாக்கிய சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தஞ்சாவூரில் கொரோனா வைரஸ் பாதித்த பெண் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False