
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த முரசொலி நிலம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல் உதயநிதி ஸ்டாலின் பயந்து தப்பி ஓடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
முரசொலி அலுவலக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் மற்றும் கீழ்ப் பகுதியில், “மூல பத்திரத்தைக் காட்டு… இல்ல முரசொலிய பூட்டு” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “முரசொலி விசாரணைக்கு பயந்து எஸ்சி எஸ்டி ஆணையத்தில் ஆஜராகாமல் உதயநிதி ஸ்டாலின் தப்பி ஓட்டம்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Singaravel Singam என்பவர் 2019 நவம்பர் 19ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முரசொலி அலுவலகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த நிலம் உண்மையில் பஞ்சமி நிலத்தில்தான் அமைந்துள்ளதா என்று சர்ச்சை எழுந்தது. தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் என்பவர் இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியது.
vikatan.com | Archived Link 1 |
dailythanthi.com | Archived Link 2 |
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகாமல் பயந்து ஓடினார் என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் முரசொலி அறக்கட்டளை தலைவர் யார், உதயநிதி ஸ்டாலின்தான் அதன் பொறுப்பாளரா? அவர் ஆஜராகாமல் உள்ளதாக செய்தி ஏதும் உள்ளதா என்று தேடினோம். கூகுளில் தேடியபோது நியூஸ்18 தமிழ் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பிய சம்மனுடன் கூடிய செய்தி இருந்தது. அந்த சம்மனில் எந்த இடத்திலும் உதயநிதி ஸ்டாலின் என்று குறிப்பிடவில்லை. ஆனால் செய்தியில், உதயநிதி ஆஜராக நோட்டீஸ் என்று இருந்தது. எனவே, அந்த செய்தி அடிப்படையில் அவர் முரசொலி அறக்கட்டளை தலைவராக இருக்கலாம் என்று தெரிந்தது.
tamil.news18.com | Archived Link |
இருப்பினும், முரசொலி நிலம் தொடர்பான பிரச்னையில் ராமதாஸ் தொடங்கி, ஜி.கே.மணி, பொன் ராதாகிருஷ்ணன் வரை அனைவரும் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பும்போது எப்படி உதயநிதி தலைவராக, நிர்வாக இயக்குநராக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. செய்தி உண்மையாக இருந்தாலும், முரசொலி தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லையா என்ற கேள்வியும் எழுந்தது. ஆர்.எஸ்.பாரதி ஆஜரான நிலையில் எப்படி, பயந்து தப்பி ஓட்டம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று பல குழப்பமான கேள்விகள் நமக்கு எழுந்தன. தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் செய்திகளில் இதுபற்றி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அதில், அறக்கட்டளைக்கு நோட்டீஸ் வந்தது என்றும் அதன் அடிப்படையில் அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் ஆர்.எஸ்.பாரதி ஆஜர் ஆனார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
kalaignarseithigal.com | Archived Link 1 |
tamil.indianexpress.com | Archived Link 2 |
மற்ற ஊடகங்களில் பார்த்தபோது, “பிரதமர் வசிக்கும் வீடு பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று வழியில் போகிற யார் வேண்டுமானாலும் புகார் கொடுத்தால் விசாரித்துவிடுவீர்களா என்று கேட்டோம். முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா, இல்லையா என்று தேடுவதற்கு அரசாங்கத்திற்கு ஒரே ஒரு மணி நேரம் போதும். ஆனால், நீங்கள் சம்மன் அனுப்பி எத்தனை நாள் ஆகிறது. இன்னும் தேடுகிறார்கள், தேடுகிறார்கள், தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தேடிக் கண்டுபிடித்து ஆதாரம் கொடுத்தால் எந்த நேரத்திலும் வரத் தயாராக இருக்கிறோம் என்று ஆணையரிடம் சொல்லிவிட்டு வந்தோம்” என்று ஆர்.எஸ்.பாரதி மிக நீண்ட பேட்டி அளித்ததாக செய்தி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம், முரசொலி அறக்கட்டளை தரப்பில் விசாரணைக்கு ஆஜரானது என்று உறுதியானது.
முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் என்று உதயநிதியை பத்திரிகைகள் குறிப்பிடுவதாலும், அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார் என்பதாலும் இப்படி தகவல் பரப்புகிறார்களா என்ற சந்தேகத்தில், தி.மு.க இளைஞர் அணி மூத்த நிர்வாகி ஒருவரை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் முரசொலி அறக்கட்டளை நிர்வாகத்துக்கும் தொடர்பு இல்லை. முரசொலி அறக்கட்டளை தலைவராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அறங்காவலராக ஆர்.எஸ்.பாரதி உள்ளார். ஆனால், இது தெரியாமல் சில பத்திரிகைகள் கூட உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் என்று எழுதுகின்றன. முரசொலி நாளிதழ் நிர்வாக இயக்குநராகத்தான் உதயநிதி உள்ளார். அறக்கட்டளை எல்லாம் தலைவரிடம் உள்ளது. பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியே தவறு… இதில் இதுபோன்ற வதந்திகளைப் பற்றி நாங்கள் என்ன சொல்ல” என்றார்.
முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி என்று பத்திரிகைகள் ஆராயாமல் வெளியிட்ட செய்தி அடிப்படையில் தவறான தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது தெரிகிறது. உதய நிதி ஸ்டாலின் தப்பி ஓடினார் என்று பதிவிட்டு பதிவாளர் மகிழ்ச்சி காண்கிறார் போல…
நம்முடைய ஆய்வில்,
முரசொலி அறக்கட்டளை தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லை என்று அவர் தரப்பு நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.
முரசொலி அறக்கட்டளை தரப்பில் நிலம் தொடர்பான விசாரணையின்போது அதன் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி ஆஜரானது உறுதியாகி உள்ளது.
விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் முரசொலி தரப்பில் அவகாசம் கேட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், முரசொலி நிலம் தொடர்பான விசாரணைக்கு பயந்து உதயநிதி ஸ்டாலின் தப்பி ஓடினார் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த முரசொலி விசாரணைக்கு பயந்து தப்பி ஓடிய உதயநிதி?
Fact Check By: Chendur PandianResult: False
