RAPID FACT CHECK: உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் முத்துராமலிங்கத் தேவருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

அமெரிக்கா வெளியிட்ட உலகின் 50 நேர்மையான தலைவர்கள் பட்டியலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலிடம் பிடித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Facebook

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகைப்படத்துடன் போட்டோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலை அமெரிக்க வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஒரே நபர் அதுவும் முதல் இடத்தை பிடித்தவர் தெய்வத் திருமகனார் முத்துராமலிங்க தேவர் மட்டுமே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை தேவர் பாய்ஸ்_தேவர் வீட்டு தேவதைகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sethu என்பவர் 2021 செப்டம்பர் 15ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல ஏராளமானவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும் அதில் முதல் இடம் மன்மோகன் சிங் பெற்றார் என்றும் முதலில் வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து நேர்மையான தலைவர் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்தார் என்று பகிரப்பட்டது. இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். 

தேசிய தலைவர்கள் அளவில் பரவிய வதந்தி, மாநில அளவுக்கு மாறியது. நேர்மையான தலைவர் பட்டியலில் காமராஜர் முதலிடம் பிடித்தார் என்று வதந்தி வெளியானது. காமராஜர் தொடங்கி, கருணாநிதி வரை அவரவர் அவரவருக்கு பிடித்த, பிடிக்காத தலைவர்களின் புகைப்படத்தை வைத்து இதே பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்க அரசோ, அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகங்களோ, ஆய்வு நிறுவனங்களோ இதுவரை நேர்மையான தலைவர்கள் என்ற பட்டியலை வெளியிடவில்லை என்று அப்போது குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது முத்துராமலிங்கத் தேவர் புகைப்படத்துடன் இதே பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நம்முடைய வாசகர்களும் கூட இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

ஏற்கனவே, அமெரிக்க அரசோ, அமெரிக்க ஊடகங்களோ, அமெரிக்க ஆய்வு நிறுவனங்களோ நேர்மையான தலைவர்கள், ஆளுமைகள் பட்டியலை வெளியிடவில்லை என்று உறுதி செய்துள்ளோம். புதிதாக ஏதேனும் பட்டியல் வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

fortune.com ஊடகம் 2021ம் ஆண்டுக்கான சிறந்த தலைவர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் முதல் இடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆட்ரினுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், 2015ம் ஆண்டில் இருந்து வெளியான பட்டியலையும் அந்த இணையதளத்தில் வெளியிட்டிருந்தனர். 

அசல் பதிவைக் காண: fortune.com I Archive 

சில இணையதள ஊடகங்களில் உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் அமெரிக்க, ஐரோப்பிய அரசர்கள், தலைவர்கள் பெயர்களே இருந்தன. இந்தியர்கள் பெயர் எதிலும் இல்லை.

அசல் பதிவைக் காண:  fandom.com I Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலிடம் பிடித்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் முத்துராமலிங்கத் தேவருக்கு முதலிடம் வழங்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் முத்துராமலிங்கத் தேவருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •