பிரிட்டன் இன்னமும் கிறிஸ்தவ நாடுதான்; முஸ்லீம் நாடு அல்ல!

உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’பிரிட்டன் இஸ்லாமிற்கு மாறியுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. மத ரீதியான குழப்பம் விளைவிக்கக்கூடிய இந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
உலக அளவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் மத ரீதியான பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும்.

உண்மையில், மேற்கண்ட பதிவில் உள்ள புகைப்படம், மிகவும் பழையதாகும். பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இளவரசர் சார்லஸ் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம். 

Christiantoday LinkArchived Link 
Nationalgeographic LinkArchived Link 

பிரிட்டனில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் முஸ்லீம் மாணவ, மாணவியருக்கு அதிக இடம் தரப்படுவதாக, சமீப காலமாக அந்நாட்டில் விமர்சிக்கப்படுகிறது. இதுதவிர பிரிட்டன் மக்கள், இஸ்லாமிய பெண்களை அதிகளவில் திருமணம் செய்வதாலும், பிரிட்டனில் வசிக்கும் இஸ்லாமியர்கள், நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்வதாலும், பிறக்கும் குழந்தைகள் உடல் ஊனத்துடன் பிறப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

Afa.net LinkArchived Link 

இவ்வாறாக, பிரிட்டன் மக்களிடையே இஸ்லாம் பற்றி வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு வரும் சூழலில், நமது ஃபேஸ்புக் பதிவர், ‘அந்நாடு இஸ்லாமிற்கு மாறி வருகிறது, கிறிஸ்தவ நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது,’ என்றெல்லாம் கூறி சார்லஸ் பற்றிய பழைய புகைப்படத்தை வைத்து தவறான தகவலை பரப்பியுள்ளார். புற சூழல் பற்றி தெரியாமல் மதம் மீது உள்ள ஆர்வம் காரணமாக, கண்ணை மூடிக்கொண்டு இப்படி தகவல் பகிர்வது சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் இடையே மத ரீதியான வெறுப்பை விதைக்கக்கூடிய செயலாகும்.

உண்மை என்னவெனில், இந்த நிமிடம் வரையிலும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் நாடாகவே பிரிட்டன் உள்ளது. கிறிஸ்தவ நாடுகளுக்கு பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள்தான் தலைமையாக உள்ளன. பிரிட்டனின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4.4% பேர்தான் இஸ்லாமியராக உள்ளனர். 

பிரிட்டனில் நிலவும் மத பிரச்னைகள் குறித்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கூட ஒரு கட்டுரை எழுதி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். 

Washingtonpost LinkArchived Link

கொரோனா அச்சம் உலக மக்களை பீடித்துள்ள நிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல் முஸ்லீம் மதம் பெரியதா, கிறிஸ்தவ மதம் பெரியதா, இந்து மதம் பெரியதா எனக் கேள்வி எழுப்பி, விவாதம் நடத்துவது சமூக வலைதளங்களில் மற்றவர்களை பாதிக்கக்கூடிய விசயமாக மாறிவிடும் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போது பகிர்ந்துள்ளனர். மேலும், பிரிட்டனில் 2வது பெரிய மதமாக இஸ்லாம் இருந்தாலும், அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4.4% பேர்தான் இஸ்லாமியர்கள் ஆவர். கிறிஸ்தவ மதத்திற்கு தலைமை வகிக்கும் நாடுகளில் பிரிட்டன் முக்கியமானதாகும். அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இன்று வரை கிறிஸ்தவமே உள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிரிட்டன் இன்னமும் கிறிஸ்தவ நாடுதான்; முஸ்லீம் நாடு அல்ல!

Fact Check By: Pankaj Iyer 

Result: False