இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

COMMUNIST 2.png
Facebook LinkArchived Link

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நல்லக்கண்ணு, த.பாண்டியன், டி.ராஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகள் எலும்புகளின் மீது பறப்பது போன்ற படம் ஆகிய அனைத்தையும் கொலாஜ் செய்து பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – அமெரிக்க உள்துறை” என்று போட்டோஷாப் மூலம் எழுதியுள்ளனர்.

நிலைத்தகவலில் “ஒவ்வொரு கம்பெனிகளை மூடவைக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் இந்த பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Sekaran Periyasamy என்பவர் செப்டம்பர் 24, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமின்றி சமூக நீதி உள்ளிட்ட பல விஷயங்களுக்காக போராடி வருபவர்கள் கம்யூனிஸ்ட்கள். தொடர்ந்து கம்யூனிஸ்டு நிர்வாகிகள், அக்கட்சியினர் மீது தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்பப்பட்டது. அது குறித்து போலீசில் புகார் செய்யும் அளவுக்கு அந்த வதந்தி வேகமாக பரவியது. 

தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழுவாக அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

இந்திய கம்யூனிஸ்ட் பற்றி ஏதேனும் அறிவிக்கையை அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Google Search Link

பயங்கரவாத குழுக்கள் என்று அமெரிக்கா அறிவித்துள்ள பட்டியலைத் தேடினோம். அப்போது அது தொடர்பான செய்திகள், பட்டியல்கள் கிடைத்தன. அவற்றில் இந்திய முஜாஹிதின் அமைப்பை மட்டுமே அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக தடை செய்திருப்பது தெரிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை. தடைவிதித்து பின்னர் நீக்கப்பட்ட அமைப்புக்கள் பட்டியலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.

COMMUNIST 3.png
United States Department of State LinkArchived Link 1
en.wikipedia.orgArchived Link 2

நம்முடைய தேடலில், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தடை இருப்பது தெரிந்தது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அது பயங்கரவாத அமைப்பு என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்று தெரிந்தது. அதே நேரத்தில், இந்திய அரசு இந்தியாவில் செயல்படும் மாவோயிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதித்திருந்த செய்தி நமக்கு கிடைத்தது. 

India TodayArchived Link 

நம்முடைய ஆய்வில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க உள்துறை அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

அமெரிக்காவின் மினிஸ்டிரி ஆஃப் ஸ்டேட் பக்கத்தில் பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெயர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் இல்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அவதூறான தகவல் பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு என்று அமெரிக்க உள்துறை அறிவித்தது என்று ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா?

Fact Check By: Chendur Pandian 

Result: False