
‘’வெனிசுலாவில் சாலையோரம் வீசப்பட்டு கிடக்கும் பணம். விவசாயத்தைக் கைவிட்டதே இதற்கு காரணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
‘’விவசாயத்தைக் கைவிட்டதால், வெனிசுலா நாடு திவாலாகிவிட்டது, அங்கே பணத்திற்கு மதிப்பில்லாமல் மக்கள் சாலையில் பணத்தை வீசிச் செல்கின்றனர். நிறைய எண்ணெய் வளம் இருந்தும், பணத்தால் எதுவும் வாங்க முடியாத பிச்சைக்கார நாடாக வெனிசுலா மாறியுள்ளது,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது உண்மையா இருக்குமோ என்ற சந்தேகத்தில் முதலில் இதுபற்றி தகவல் தேட தொடங்கினோம். இந்த புகைப்படம் 2019ம் ஆண்டில் பேஸ்புக் பயனாளர் ஒருவரால் பகிரப்பட்டிருந்ததை கண்டோம்.
Facebook Post Link | Archived Link |
ஆங்கிலத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சோஷலிச நாட்டில் பணம் மதிப்பிழந்துவிட்டது, எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இதுதொடர்பாக மேலும் ஏதேனும் செய்தி விவரம் கிடைக்கிறதா என தேடினோம். அப்போது 2018ம் ஆண்டில் CNN ஊடகம் வெளியிட்ட ஒரு செய்தி காண நேரிட்டது. அந்த செய்தியில் பணவீக்கத்தை சமாளிக்கவும், சமூகத்தில் நிலவும் குழப்பதை தவிர்க்கவும் வெனிசுலா அரசு புதிய கரன்சியை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே புழக்கத்தில் இருந்த Bolivares கரன்சியை செல்லாது என அறிவித்துவிட்டு, Boliver Soberano என்ற பெயரில் புதிய கரன்சியை 2018ம் ஆண்டு வெனிசுலா அரசு அறிமுகம் செய்திருக்கிறது. குறிப்பாக, பழைய கரன்சியில் ஆயிரம் மதிப்பிற்கு கீழே உள்ள நோட்டுகள் எதற்குமே உதவாது; அதற்கு மேலே உள்ள கரன்சிகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்டுவிட்டதால், பலர் 1000க்கும் குறைவாக உள்ள கரன்சிகளை வேறு வழியின்றி சாலைகளில் வீசிச் செல்லும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றுதான் மேலே நாம் பார்த்த புகைப்படமும்.
CNN news link | Archived Link |
இதே செய்தியை வெனிசுலாவில் இருந்து வெளியாகும் உள்நாட்டு ஊடகம் ஒன்றும் வெளியிட்டிருக்கிறது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Maduradas News Link | Archived Link |
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவுகளில் ஒன்றின் லிங்க் கீழே ஆதாரத்திற்காக தரப்பட்டுள்ளது.
Twitter Link | Archived Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) வெனிசுலா அரசு புதிய கரன்சியை அறிமுகம் செய்த காரணத்தால் பழைய கரன்சிக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அதிலும், 1000 மதிப்பிற்கும் குறைவான கரன்சிகளை திருப்பிப் பெற முடியாது என்று வெனிசுலா அரசு கூறிவிட்டது. இதனால், எதற்கும் மதிப்பில்லாத அந்த கரன்சிகளை மக்கள் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
2) வெனிசுலா நாட்டில் விவசாயத்தை யாரும் கைவிடவில்லை. விவசாயம் செய்பவர்கள் செய்துகொண்டுதான் உள்ளனர். அந்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரத்தில் விவசாயமும் முக்கிய பங்களிப்பு வழங்குகிறது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உண்மையுடன் தவறான தகவல் கலந்துள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:வெனிசுலாவில் சாலையோரம் பணம் வீசப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
