
அரசு நாட்டில் பெண்களை விற்கும் சந்தை நடைபெறுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
தெளிவில்லாத வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தக்பீர், அல்லாஹூ அக்பர் என்று கோஷம் எழுகிறது. ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஏலம் விடுபவர், “18 வயது இளம் பெண், மிகவும் குறைவான விலை. 25 டாலர்” என்கிறார். ஏலம் எடுப்பவர் 50 டாலர்-க்கு கேட்கிறார். வேறு யாராவது ஏலம் கேட்கின்றீர்களா என்று கேட்கும் அவர், விற்றுவிட்டதாக அறிவிக்கிறார். அடுத்ததாக 15 வயது பெண்ணை விற்பதாக கூறுகிறார். எவ்வளவுக்கு ஏலம் எடுக்க தயாராக உள்ளீர்கள் என்று ஏலம் எடுப்பவர்களைப் பார்த்து கேட்கிறார். கேமரா அப்படியே பார்வையாளர்கள் பக்கம் திரும்புகிறது. பெண்கள் உள்பட சிலர் அமர்ந்திருக்கின்றனர். கடைசியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று கண்டன கோஷம் எழுப்புகின்றனர்.
2.32 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை, Kshatriya TV என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 14 அன்று வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “அரபு நாட்டில் பெண்களை விற்கும் சந்தை. woman for sales” என்று குறிப்பிட்டுள்ளனர். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த வீடியோவில் பெண்களை விற்பனை செய்வது போன்று ஏலம் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முழுமையாகப் பார்க்கும்போது அரசு நாட்டில் நடப்பது போல இல்லை. ஐரோப்பியர்கள் பலரும் நடந்து செல்கிறார்கள். அருகில் இரண்டு காவலர்கள் நிற்கிறார்கள். மாடி பஸ்கள் சில கடந்து செல்கிறன்றன. கடைசியில் ஐ.எஸ் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று கோஷம் எழுப்புகிறார்கள். பலரும் இதை வீடியோ எடுக்கின்றனர்.
இந்த வீடியோவில், பஸ் ஒன்று கடந்து செல்வதை காண முடிந்தது. அந்த பஸ்ஸில் windsorian என்று எழுதப்பட்டிருந்தது. அதை வைத்து கூகுளில் தேடியபோது, அது லண்டனில் உள்ள பஸ் டிராவல்ஸ் நிறுவனம் என்பது தெரிந்தது. டிராவல்ஸ் பெயர், போலீசார் மற்றும் மாடி பஸ்ஸை பார்க்கும்போது இது லண்டனில் நடந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.
கூகுளில் “லண்டன், இஸ்லாமியப் பெண்கள், ஏலம்” ஆகிய கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது, பிபிசி வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், லண்டனில் நடந்த மாதிரி பெண்கள் ஏலம் என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் உள்ள நபர், காட்சிகளைப் பார்க்கும்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ளது போல இருந்தது. ஏலம் விட்ட நபர், பெண்கள் கையில் சங்கிலி என்று எல்லாம் இதிலும் இருந்தது.
bbc.com | Archived Link |
பிபிசி செய்தியில் இஸ்லாமிக் ஸ்டேட்-க்கு (ஐ.எஸ்) எதிராக குர்திஷ் செயற்பாட்டாளர்கள் பிரசாரம் மேற்கொண்ட வருகின்றனர். அவர்கள் லண்டனில் இஸ்லாமிக் ஸ்டேட் செக்ஸ் மார்க்கெட் மாதிரியை நிகழ்த்திக் காட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். முழு வீடியோவும் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு கிடைக்கவில்லை.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ள காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிபிசி செய்தி வெளியிட்ட அதே நேரத்தில் வெளியான மற்றொரு செய்தி கிடைத்தது. அதில், லண்டனில் இஸ்லாமியப் பெண்கள் ஏலம் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியை ஓப்பன் செய்து பார்த்தோம்.
அது 2016ம் ஆண்டு வெளியான செய்தியின் உண்மை கண்டறியும் ஆய்வுக் கட்டுரை என்பது தெரிந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை வைத்து லண்டனில் இஸ்லாமிய பெண்களை ஏலம் விடுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதாகவும் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அந்த ஆய்வில், இது அசல் பெண்கள் விற்பனை ஏலம் இல்லை என்றும், ஐ.எஸ் பயங்கரவாதிகள் தினம் தினம் எப்படி ஈராக், சிரியாவில் பெண்களை விற்பனை செய்கிறார்கள் என்பதை பொது மக்களுக்கு தெரியவைக்க செய்யப்பட்ட நாடகம் என்றும் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அந்த கட்டுரையில் அவர்கள் ஆதாரமாக அளித்திருந்த வீடியோக்கள் எல்லாம் யூடியூபில் நீக்கப்பட்டிருந்தது. அதனால், அசல் வீடியோ நமக்கு கிடைக்கவில்லை.
huffingtonpost.co.uk | Archived Link |
இந்த கட்டுரையின் தலைப்பை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, dailymail.co.uk வெளியிட்ட வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வின் மற்றொரு வீடியோ கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள நபர்கள் இருப்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. ஏலமிடப்பட்ட பெண்களும் கடைசியில் தங்கள் கருப்பு மேலாடையை அகற்றிவிட்டு போஸ் கொடுப்பதை காண முடிந்தது.
dailymail.co.uk | Archived Link |
மேலும், 2014ம் ஆண்டு இந்தியா டி.வி வெளியிட்ட வீடியோ ஒன்றும் யூடியூபில் கிடைத்தது. அதுவும், ஈராக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பெண்களை விற்பனை செய்வது தொடர்பான வீதி நாடகம் லண்டனில் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோ அரபு நாடுகளில் இல்லை, லண்டனில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
இது பெண்களை விற்பனை செய்யும் சந்தை இல்லை… ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெண்களை விற்பனை செய்வதன் மாதிரி வீதி நாடகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தவறான விதத்தில் பகிரப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அரபு நாடுகளில் பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள் என்று பகிரப்பட்ட வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அரபு நாட்டில் பெண்களை விற்கும் சந்தை! – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False

Thank you