பசு மாட்டின் உடலில் உலக வரைபடம்! – பரவசத்தை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

இந்தியா சமூக ஊடகம்

உடுப்பியில் உள்ள பசுவின் உடலில் உலக வரைபடம் உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

உலக வரைபடத்துடன் உள்ள பசுவின் படத்தை பகிர்ந்துள்ளனர்.  படத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில், “பசுவின் உடலில் உள்ள வரைபடம். உடுப்பியில் உள்ள இந்த பசுவின் உடல் முழுவதும் உலக வரைபடத்தின் தோற்றம் அச்சு மாறாமல் அப்படியே உள்ளது. இயற்கையின் அற்புதம்” என்று குறிப்பிட்டுள்ளனர். கன்னடத்தில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. 

இந்த பதிவை, ‎பத்து ரூபாய் இயக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Suresh Nainar என்பவர் 2020 ஜனவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இதைப் பார்க்கும்போதே போட்டோஷாப் மூலம் உலக வரைபடத்தை வைத்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆனாலும், இதை 7000-க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர் என்பதால் இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தில் உள்ள பசு உண்மையானது போல தெரியவில்லை. இந்தியாவைச் சேர்ந்த பசுவின் உடலில் அச்சு அசலான உலகப் படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அதில் இந்தியாவின் வரைபடமே அரைகுறையாக உள்ளது. பின்னணியில் சுற்றிலும் விலங்குகள் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. பார்க்க ஏதோ ஒரு கண்காட்சிக்காக கலைக்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விலங்குகளின் மாதிரி போல தெரிகிறது.

பெங்களூருவில் உள்ள ஊடக நண்பர்களைத் தொடர்புகொண்டு இந்த படத்தில் கன்னடத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் இப்படி ஒரு பசு இருப்பதாக எப்போதாவது செய்தி வெளியானதா என்று கேட்டோம். அதற்கு அவர், அந்த படத்தில், “நானு கன்னடிகா” என்று எழுதப்பட்டுள்ளது. மற்றபடி இந்த மாடு தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. கன்னடத்தில் இப்படி ஏதும் செய்தி வெளியானதாக நினைவில் இல்லை என்றனர்.

உடுப்பியில் ஆச்சரியமான பசு என்று செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அதுபோல எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இது போட்டோஷாப் மகிமை என்று பல செய்திகள் வெளியாகி இருப்பது தெரிந்தது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம் bangaloremirror.indiatimes.com வெளியிட்டிருந்த செய்தியில் கிருஷ்ணரின் லீலை என்று கூறி இதே பசுவின் படத்தை பகிர்ந்து வருவதாக கூறப்பட்டு இருந்தது. அதில் கூட, இது போட்டோஷாப் என்று குறிப்பிட்டிருந்தனர். இன்னொரு பதிவில் இதுபோன்று பகிரப்படும் மற்ற படங்களை எல்லாம் பகிர்ந்து, வழக்கமான போட்டோஷாப் என்று குறிப்பிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இயற்கையின் அற்புதம் என்று குறிப்பிட்டிருந்தனர்… ஆனால், இதற்கு முன்பு பல பதிவுகளில் கிருஷ்ண லீலை என்றும், இயேசுவின் அற்புதம் என்றும் பகிரப்பட்டு வந்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

bangaloremirror.indiatimes.comArchived Link 1
check4spam.comArchived Link 2
smhoaxslayer.comArchived Link 3

நம்முடைய ஆய்வில்,

உடுப்பியில் பசுவின் உடலில் வரைபடம் உள்ளது என்று எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

பல ஆண்டுகளாக பல விதங்களில் இதே படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது போட்டோஷாப் படம் என்று வெளியான கட்டுரைகள் நமக்கு கிடைத்துள்ளன.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “பசுவின் உடலில் உள்ள வரைபடம். உடுப்பியில் உள்ள இந்த பசுவின் உடல் முழுவதும் உலக வரைபடத்தின் தோற்றம் அச்சு மாறாமல் அப்படியே உள்ளது. இயற்கையின் அற்புதம்” என்று பகிரப்படும் படம் அசல் இல்லை, போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பசு மாட்டின் உடலில் உலக வரைபடம்! – பரவசத்தை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •