
இந்தியாவில் குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தலையில் மிகப்பெரிய வெட்டுக் காயத்துடன், முகம் முழுக்க ரத்தம் வடிந்தபடி உள்ள பெண்ணின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியா, இந்து மதத்தால் அழிந்துவிடும். குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண் தாக்கப்பட்டுள்ளார். இடம் – முபாரக்பூர்” என்று குறிப்பிட்டு ஒரு செய்தி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
செய்தி இணைப்பு உள்ளதால் இந்த சம்பவம் உண்மையாக நடந்திருக்கும் என்ற எண்ணம் எழுந்தது. அந்த இணைப்பை திறந்து பார்த்தோம். அதில், “குடி தண்ணீர் எடுக்க வந்த இந்து பெண்கள் தாக்கப்பட்டார்கள். மூன்று பெண்கள் உள்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். தண்ணீர் எடுத்ததற்காக சும்ரா இன மக்கள் தாழ்த்தப்பட்ட இந்து இன பெண்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் சுக்கூர் முபாரக்பூரில் ஏப்ரல் 25ம் தேதி நடந்தது. உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
சுக்கூர் முபாராக்பூர் எங்கே உள்ளது என்று கூகுள் செய்து பார்த்தபோது, அது பாகிஸ்தானில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து தேடியபோது, பாகிஸ்தானில் குடிநீர் எடுக்கச் சென்ற இந்து பெண்கள் மீது தாக்குதல் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. சில ஆன்லைன் ஊடகங்களும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சிந்து போலீஸ் ட்வீட்டர் பக்கத்தில் ஏதேனும் தகவல் உள்ளதா என்று தேடினோம். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மையினர் நல தன்னார்வலர் ஒருவர் சிந்து போலீசை டேக் செய்து வெளியிட்டிருந்த பதிவுக்கு சிந்து போலீஸ் பதில் அளித்திருப்பது தெரிந்தது.
Dhanjee Kolhi என்ற அந்த நபர், “இந்தியர்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அதனால் நான் என்னுடைய பதிவை அழித்துவிட்டேன். நான் என்னுடைய பதிவில் எந்த இடத்திலும் தாக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்றோ, சிறுபான்மையினர் என்றோ குறிப்பிடவில்லை. இதுபோன்ற பொய்யான செய்திகள் மூலம் என்னுடைய நட்டைப் பற்றி அவதூறு பரப்ப முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு சிந்து போலீஸ், “பாவப்பட்ட பெண்ணுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்கள் மீது சுக்கூர் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். முக்கிய குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சிறுபான்மை சமுகத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவர் கோகர் என்ற பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஆவார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
சிந்து மாகாணத்தின் சுக்கூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் Irfan Samo வெளியிட்ட பதிவை சிந்து போலீஸ் ரீட்வீட் செய்திருந்தது. அதில், “கோகார் மற்றும் சும்ரா இடையேயான மோதல் இது. அனைவரும் இஸ்லாமியர்கள்தான். அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்று தவறாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் எந்த மதம், சாதி, பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் படம் இல்லை. ஆனால், சம்பவம் நடந்த சுக்கூர் குறிப்பிடப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டது பெண் என்று தெரிந்துள்ளது, இந்து என்று வதந்தி பரப்பப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதுவும் சம்பவம் நடந்த ஏப்ரல் 25ம் தேதியே வெளியாகி உள்ளது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள பெண் பற்றி குறிப்பிடுவது உறுதியாகிறது.
நம்முடைய ஆய்வில்,
தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட பெண் இந்து மதத்தைச் சார்ந்தவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சுக்கூரில் இஸ்லாமியர்களில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் இந்த பெண் தாக்கப்பட்ட செய்தி கிடைத்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சிந்து மாகாண போலீஸ் வெளியிட்ட ட்வீட்கள் கிடைத்துள்ளன.
இதன் அடிப்படையில், இந்தியாவில் குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததற்காக தலித் பெண்கள் தாக்கப்பட்டார்கள் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.

Title:குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்ததால் தலித் பெண் தாக்கப்பட்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
