‘என் தந்தைக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான் நீங்கள் எப்படி இளைஞர் ஆக முடியும், கல்லூரி மாணவியிடம், நொந்து நூடுல்ஸ் ஆன ராகுல்,’ என்று ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவிகள் கேள்வி கேட்டதால் ராகுல் ஓட்டம் எடுத்தார் என்று பல வதந்திகள் உலாவும் நேரத்தில், இதிலாவது உண்மை இருக்குமா என்று ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு.


வதந்தியின் விவரம்

எனது தந்தைக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான் நீங்கள் எப்படி இளைஞர் ஆகமுடியும் கல்லூரி மாணவியிடம் நொந்து நூடுல்ஸான ராகுல் ! TNNEWS24

Archive link

டிஎன்நியூஸ்24 என்ற இணையதளம், அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளது. இந்த பதிவு 2019 மார்ச் 17ம் தேதி வெளியாகி உள்ளது. ‘புனேவில் உள்ள கண் கிரைஸ்ட் கல்லூரியில் நடந்த மாணவர் சந்திப்பின்போது, மாணவி ஒருவர் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ராகுல் காந்தி வெளியேறினார்,’ என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களால் இந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்

சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவியர்களுடனான சந்திப்பில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கிறிஸ்தவ கல்வி நிறுவனம் எப்படி இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தலாம் என்று சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ - மாணவிகளுடனான நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு எதிராக மாணவர்கள் கேள்வி கேட்டு திணறடித்தனர் என்ற வதந்தி விதவிதமாக வந்துகொண்டே இருக்கிறது.

இது தொடர்பாக, ஏற்கனவே நம்முடைய FactCrescendo கூட ஆய்வுகளை மேற்கொண்டு, இத்தகைய செய்திகளின் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன்படி, ராகுல் காந்தி தொடர்பான டிஎன்நியூஸ்24-ன் செய்தி 2019 மார்ச் 17ம் தேதி வெளியாகி உள்ளது. அப்படி என்றால், அந்த தேதி அல்லது அதற்கு முன்பாக இந்த நிகழ்வு நடந்திருக்க வேண்டும். ராகுல் காந்தியின் பயணம் தொடர்பான விவரம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ளது. அதில் ஆய்வு செய்தபோது, ராகுல்காந்தி மார்ச் மாதம் புனேவுக்கு பயணம் மேற்கொள்ளவே இல்லை. ராகுல் காந்தியின் பயண விவரம் பற்றி விரிவாக பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archive link

ராகுல்காந்தி மார்ச் மாத பயண திட்டம் தொடர்பான ஆதார படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சரி இதற்கு முன்பாக, எப்போதாவது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல ‘புனே கண் கிரைஸ்ட்’ கல்லூரிக்கு ராகுல் காந்தி சென்றுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். அப்படி நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. உண்மையில் புனேயில் கண் கிரைஸ்ட் கல்லூரி என்ற பெயரில் கல்லூரி எதுவும் இல்லை. அதேநேரத்தில் கிறிஸ்ட் கல்லூரி என்று தான் உள்ளது. கல்லூரி பெயரிலேயே அவர்களுக்கு இருந்த குழப்பம் புரிந்தது.


இதுதவிர, கிரைஸ்ட் கல்லூரிக்கு ராகுல் காந்தி வந்துள்ளாரா என்று தேடினோம். அப்படி ஏதும் செய்தி கிடைக்கவில்லை. ஆதார படம் கீழே…

ராகுல் காந்தியின் வயதை வைத்து மாணவி கேள்வி கேட்டுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். அதுபோன்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. ஆனால், டிஎன்நியூஸ்24 வெளியிட்ட மற்றொரு பொய் செய்திதான் நமக்குக் கிடைத்தது.


இது தவிர, ராகுல் புனேவில் வேறு ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்றாரா என்றும் கூட கூகுளில் தேடி பார்த்தோம். எந்த செய்தியோ, வீடியோவோ, புகைப்பட ஆதாரமோ நமக்கு கிடைக்கவில்லை. கிடைத்த தரவுகள் அனைத்துமே, தேதி, இடம் முதற்கொண்டு நேர்மாறாகவே இருந்தன. ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதையடுத்து, டிஎன்நியூஸ்24 பயன்படுத்திய படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். மாணவ மாணவிகளுடன், ராகுல் கைகுலுக்கும் படமானது 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி பெங்களூரூவில் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டதாக, தெரியவந்தது . கூகுளில் கிடைத்த படத்தை வைத்து இவர்களாகவே ஒரு செய்தியை உருவாக்கிவிட்டது புரிந்தது.


ராகுல் காந்தி பற்றி இப்படி உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்ட டிஎன்நியூஸ்24 என்ற இணைய தளத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய முடிவு செய்தோம். அந்த தளத்துக்குள் சென்று பார்த்தோம். உள்ளே எல்லாமே அவதூறான, வன்முறையைத் தூண்டும் செய்திகளாகவே இருந்தன. இதன்மூலம், அந்த இணையதளம் நம்பகமில்லாத ஒன்று என்பது உறுதியாகிறது. பொய்யை பரப்புவது மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர் என்பதால் பொது மக்கள் இந்த மாதிரியான தளங்களைத் தவிர்ப்பது நல்லது.

இந்த செய்தியை ஏன் எழுதினார்கள் என்ற கேள்வி எழும். அதற்கு விடை இந்த செய்தியின் கடைசி பத்தியில் இருந்தது. "நேற்று டெல்லியில் இன்று மஹாராஷ்டிரா என செல்லும் இடங்களில் எல்லாம் ராகுல் அவமானப்பட ஆனால் தமிழக மீடியாகளோ ராகுலை தலையில் வைத்து கொண்டாடியவண்ணம் உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகம் வந்த ராகுல் காந்தியின் பயணம் பெரிய அளவில் பேசப்படவே, எதிர்வினையாற்றும் வகையில் இந்த பொய் செய்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

ஆதாரப் படம் கீழே…

ஆய்வில் நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,

1) ராகுல் காந்தியின் 2019 மார்ச் மாத பயண விவர பட்டியலில், புனேவுக்கு சென்றதாகவோ, செல்ல இருப்பதாகவோ எதுவுமே குறிப்பிடவில்லை.
2) கல்லூரி மாணவி கேள்வி கேட்டதற்குப் பதில் சொல்ல முடியாமல் ராகுல் காந்தி வெளியேறியதாக, கூகுளில் எந்த செய்தி ஆதாரமும் கிடைக்கவில்லை.
3) டிஎன்நியூஸ்24 சொல்லியுள்ளது போல கண்கிரைஸ்ட் என்ற கல்லூரியே புனேவில் இல்லை. கிரைஸ்ட் கல்லூரி மட்டுமே உள்ளது.
4) பெங்களூரூவில் 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இப்போது நடந்ததுபோல சித்தரித்து, செய்தி வெளியிட்டுள்ளனர்.
5) குறிப்பிட்ட செய்தி இணையதளத்தின் ஒரு பக்க சார்பு மற்றும் நம்பகமின்மை இவற்றை வைத்து பார்க்கும்போது, திட்டமிட்டு இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

இவற்றின் அடிப்படையில், ராகுல் காந்தியின் வயது தொடர்பாக கல்லூரி மாணவி கேள்வி எழுப்பினார் என்ற செய்தியே பொய்யானது என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

நமக்குக் கிடைத்த ஆதாரங்களின்படி, புனே தி கிரைஸ்ட் கல்லூரிக்கு ராகுல் காந்தி செல்லவே இல்லை. மாணவர்களுடனான சந்திப்பு எதுவும் அங்கு நடைபெறவே இல்லை. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தவறான செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:மாணவியின் கேள்வியால் நொந்து நூடுல்ஸ் ஆன ராகுல் காந்தி?

Fact Check By: Praveen Kumar

Result: False