பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டு கதறி அழுத வைகோ! – விஷம வீடியோ

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டு ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்ணீர்விட்டு அழுதார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அழும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பெரியார் சிலை அவமதிப்பை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் வைகோ.. பெரியார் சிலை அவமதிப்பை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் வைகோ.. கடவுள் மறுப்பு கொள்கை தோற்றுப்போனது என கண்கலங்கினார்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நேதாஜி மாத இதழ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூலை 18ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். தொண்டர்கள், நண்பர்களுக்கு ஏதாவது ஒன்று ஒன்றால் பொங்கி எழுவது போலக் கண்ணீரும் விடுபவர். தற்போது கோவையில் பெரியார் சிலை மீது இந்து அமைப்பினர் காவி பெயிண்ட் ஊற்றி அவமரியாதை செய்ததை நினைத்து அவர் கதறி அழுதார் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோ உண்மையா, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். வைகோ கதறி அழுதார் என டைப் செய்து கூகுளில் தேடியபோது பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. குறிப்பிட்ட இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம்.

2018ம் ஆண்டு வைகோவின் மருமகன் தீக்குளித்த போது மதுரையில் அவர் கதறி அழுத காட்சி அது என்பது தெரிந்தது. நியூஸ் 18 தமிழ்நாடு இது தொடர்பான வீடியோவை 2018 ஏப்ரல் 13ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது. அதில், நாம் தமிழர் கட்சியினர் போட்ட மீம்ஸ்களே தற்கொலைக்கு காரணம் என்று வைகோ கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த வீடியொவில் அழுகை காட்சியைத் தொடர்ந்து, வைகோ அளித்த  பேட்டியையும் பதிவேற்றம் செய்திருந்தது. அதில், நாம் தமிழர் கட்சியின் போட்ட பொய்யான மீம்ஸ்தான் தன் மருமகன் தீக்குளிக்கக் காரணம் என்று அவர் கூறினார்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோ, தினமலர் நாளிதழ் வெளியிட்டது. எனவே, தினமலரில் இந்த வீடியோவை தேடி எடுத்தோம். தினமலர் வெளியிட்ட வீடியோவில் தீக்குளிப்புக்கு சீமான்தான் காரணம் என்று தலைப்பிட்டிருந்தனர். அதை நீக்கிவிட்டு, வைகோ க்ளோஸ்அப் காட்சியை மட்டும் எடிட் செய்து எடுத்து வீடியோ வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Youtube Link

இதன் மூலம், தற்போதைய அரசியல் நிகழ்வுக்காக வருந்தி, வைகோ கண்ணீர்விட்டு அழுதார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டு கதறி அழுத வைகோ! – விஷம வீடியோ

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •