
‘’இந்து மதத்தவரை திட்டியதற்காக முஸ்லீம் நபர் சவுதியில் கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த பதிவில் சவூதி குடிமகன் போல உடை அணிந்த நபரை போலீசார் வலுக்கட்டாயமாக மடக்கி பிடித்து காரில் ஏற்றுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஒரு ஹிந்துவை திட்டிய தன் குடிமகனை கைது செய்த சவூதி அரேபிய அரசு. சட்டம் அனைவருக்குமானது. மத ரீதியான துன்புறுத்தல்களை சவூதி ஒருபோதும் பொருத்துக் கொள்ளாது எனவும் அறிவிப்பு,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் கூறியுள்ள தகவல் உண்மையான ஒன்றா எனும் சந்தேகத்தில் இதில் உள்ள புகைப்படத்தை முதலில் கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதுபற்றி நிறைய செய்தி விவரங்கள் கிடைத்தன. முதலில், இது உண்மையானதுதான் என்பது போலக் கூறப்பட்டிருந்த ஒரு இணையதள செய்தியை பார்த்தோம். அதில், இதே புகைப்படத்தை இணைத்து செய்தி வெளியிட்டிருந்தனர்.
ஆனால், இப்படி வேறு ஏதேனும் ஊடகங்களில் செய்தி வெளியானதா என்று தேடிப் பார்த்தோம். இதுபோன்ற செய்தி எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இதன் மீது சந்தேகம் அதிகரித்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட புகைப்படம் தொடர்பாக விரிவான விவரம் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் கடந்த பல ஆண்டுகளாகவே இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் விவரம் கிடைத்தது.
இதன்படி, முதலில் ஒரு செய்தியை பார்த்தோம். 2019, செப்டம்பர் 23 தேதியிட்ட அந்த செய்தியில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, நமக்கு கிடைத்த மற்றொரு செய்தி 2016ம் ஆண்டில் வெளியானதாகும். அதிலும் இதே புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட செய்தியில், இந்த புகைப்படம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஃபைல் புகைப்படம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது 2020ம் ஆண்டில் அதுவும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என தெளிவாகிறது.
இந்த புகைப்படம் பழையதுதான் என நிரூபிக்கக்கூடிய மற்றும் ஒரு ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்:-
கடந்த 2012ம் ஆண்டில் மெக்கா நகரில் சவூதி அரேபிய போலீசார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகையின்போது எடுத்த புகைப்படம்தான் இது என்று உறுதியாகிறது. பல ஆண்டுகளாகவே இணையத்தில் பகிரப்படும் இந்த புகைப்படத்தை எடுத்து, புதிய தகவலை இணைத்து, தற்போது வதந்தி பரப்பியுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு எமது வாட்ஸ்ஆப் எண்ணை (+91 9049044263) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இந்துவை திட்டிய இந்த முஸ்லீம் நபரை சவூதி அரசு கைது செய்ததா?
Fact Check By: Pankaj IyerResult: False

https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-orders-arrest-of-national-for-abusing-non-muslim-expat-1.71333266