
“என் மறைவுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாக மாற்றப்படும்” என்று கருணாநிதி கூறினார். ஆனால், வருடம் ஒன்று ஆகப்போகிறது, தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாத இவரால் எப்படி தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என் மறைவிற்குப் பிறகு கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாக மாற்றப்படும் – டன்மான டலிவர் #கலைஞர் …
வருடமும் ஒன்று ஆக போகுது, தகப்பனுடைய ஆசைய நிறைவேற்ற முடியாத இவரால் எப்படி தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியும்? #ஆக, இதுவும் டீம்கா வின் தேர்தல் அறிக்கை போல் உள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, கோணவாயன் என்ற ஃபேஸ்புக் ஐ.டி கொண்ட நபர் 2019 ஜூலை 31ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தான், தன்னுடைய மனைவி தயாளுஅம்மாள் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனையாக மாற்றப்படும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தன்னுடைய மறைவுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று கருணாநிதி கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
2009ம் ஆண்டு தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தொடங்கிவைத்தார். தொடக்க விழாவின்போது பேசிய அவர், “என் மறைவுக்குப் பிறகு, என்னுடைய மனைவி தயாளு அம்மாள் மறைவுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாக மாற்றப்படும்” என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு வீட்டை தானமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது தொடர்பாக தினமணியில் வெளியான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த கட்டுரையைப் படித்துவிட்டு, “என் மறைவு, என்னுடைய மனைவியின் காலத்துக்குப் பிறகு” என்று குறிப்பிட்டுள்ளதை மறந்துவிட்டு, 2010ம் ஆண்டே தானமாக வழங்கிய கருணாநிதி, அதன் பிறகு ஏன் அங்கு வசித்தார் என்று கேள்வி எழுப்புவார்களோ என்னவோ…

கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தை 1955ம் ஆண்டு சர்வேசுவர அய்யர் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1968ம் ஆண்டு தன் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய 3 பேர் பெயரில் இந்த வீட்டை கருணாநிதி எழுதி வைத்தார். 2009ம் ஆண்டு அவர் இந்த வீட்டை ஏழை- எளிய மக்கள் பயன்பெற மருத்துவமனையாக மாற்ற விரும்பினார். இதையடுத்து 2009ம் ஆண்டு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மூவரும் இந்த வீட்டை மீண்டும் கருணாநிதியிடம் ஒப்படைத்தனர்.
அதன் அடிப்படையில் 2010ம் ஆண்டு ஜூன் 2ம் பத்திரப்பதிவு மூலம் இந்த வீடு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு இந்த வீடு மருத்துவமனையாக மாறும். கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அந்த மருத்துவமனை அழைக்கப்படும். இந்த மருத்துவமனையை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கும் என்று தான பத்திரத்தில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பான 2010ம் ஆண்டு வெளியான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு கூட இந்த தகவல் பல ஊடகங்களில் வெளியானது.
தற்போது கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் துணைவியார் தயாளுஅம்மாள் வசித்து வருகிறார். இது தொடர்பாக பி.பி.சி வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை நிலை இப்படி இருக்க, கருணாநிதி மறைந்து ஓராண்டாகிவிட்டது எப்போது கருணாநிதி வசித்த கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தயாளுஅம்மாளை வெளியேற்றிவிட்டு மருத்துவமனையாக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்களா என்று தெரிவில்லை.
நம்முடைய ஆய்வில்,
தன்னுடைய கோபாலபுரம் இல்லம் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று கருணாநிதி அறிவித்தது பற்றிய செய்தி கிடைத்துள்ளது.
தன், தன்னுடைய மனைவியின் காலத்துக்குப் பிறகு கோபாலபுரம் இல்லம் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று கருணாநிதி தான பத்திரம் எழுதிக் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோபாலபுரம் இல்லத்தில் தற்போது தயாளுஅம்மாள் வசித்துவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கருணாநிதியின் வீடு அவர் மறைந்து ஓராண்டு ஆன நிலையிலும் மருத்துவமனையாக மாற்றப்படவில்லை, தனது தந்தையின் விருப்பத்தை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கலைஞர் மறைந்து ஓராண்டாகியும் அவரது கோபாலபுரம் வீடு மருத்துவமனையாகாதது ஏன்?
Fact Check By: Chendur PandianResult: False

முழுக்க முழுக்க திமுக ஆதரவாளர் ஆகவே மாறிவிட்ட உண்மை கண்டறியும் குழு பாஜக சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் உலா வரும் வேலைகளில் அதிக கவனம் செலுத்தாமல் திமுக காங்கிரஸ் எதிர்ப்பு பதிவுகளில் ஒரு சில எழுத்துப் பிழைகள் இருந்தால் அதனை மிகப்பெரிய அளவில் சுட்டிக்காட்டி அந்த குரூப் அல்லது விளக்குவதே இக் குழுவின் நோக்கமாக உள்ளது