
‘’பாகிஸ்தான் குத்துச்சண்டை வீராங்கனையுடன் மோதிய தமிழ்ப்பெண் கவிதா,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
செப்டம்பர் 6, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இரு பெண்கள் மோதிக் கொள்ளும் மல்யுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே,’’ பாகிஸ்தானைச் சார்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மும்பையில் நடைபெற்ற போட்டியில் வென்ற வீராப்பில் என்னை வெல்ல இந்தியாவில் எவரும் இல்லை என கர்ஜித்த போது கூட்டத்தின் நடுவே இருந்த தூத்துக்குடியை சார்ந்த இளம் பெண் கவிதா துணிச்சலுடன் மேடை ஏறி எதிர்கொண்ட காட்சி… வாழ்க தமிழினம் 💪,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவை நன்கு கவனித்தாலே, இது பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் ஒரு தொழில்முறை மல்யுத்தப் போட்டி என்றும், அதில் மோதுகிறவர்கள் உரிய பயிற்சி பெற்ற நபர்கள்தான் என்றும் எளிதாகப் புரியும். இதைக் கூட கவனிக்காமல், ‘’வாழ்க தமிழினம்’’ என்று கூறி இந்த வீடியோவை தவறான தகவலுடன் சிலர் பரப்பி வருகின்றனர்.
இதில் இடம்பெற்றுள்ள CWE (https://www.g8cwe.com/) என்பது பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடத்துகிற இந்தியர்களுக்கான தொழில்முறை மல்யுத்த பயிற்சி நிறுவனம் ஆகும்.
இதன் முழுப் பெயர் Continental Wrestling Entertainment.
இவர்கள் பாராட்டும் கவிதா என்ற பெண், உண்மையில் ஒரு தொழில்முறை பயிற்சி பெற்ற மல்யுத்த வீராங்கனை ஆவார். இவர் முதலில் பளு தூக்கும் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். இந்தியா சார்பாக, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கூட பங்கேற்றுள்ளார்.
கிரேட் காளி நடத்தும் மல்யுத்த பயிற்சி அகாடமியில் இணைந்து, பயிற்சி பெற்ற பின் தொழில்முறை மல்யுத்தப் போட்டிகளில் கவிதா தேவி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரது அறிமுகம் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, செய்யப்பட்ட ஒரு நாடகத்தனமான நிகழ்ச்சிதான் பலரும் ஷேர் செய்து வரும் குறிப்பிட்ட வீடியோ.
இந்த வீடியோவை ஜூன் 13, 2016 அன்று CWE அதிகாரப்பூர்வமாக யூடியுப்பில் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கவிதா தேவிக்கும், பிபி புல் புல் என்கிற மற்றொரு மல்யுத்த வீராங்கனைக்கும் இடையே நிகழ்ந்த மோதல் காட்சியையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதற்கடுத்தப்படியாக, 2016ம் ஆண்டு ஜூலையில் இவர்களுக்கு இடையே நிகழ்ந்த மற்றொரு தொழில்முறை மல்யுத்தப் போட்டி காட்சியையும் கீழே இணைத்துள்ளோம்.
இந்த அறிமுகத்தின் மூலமாகக் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி, கவிதா தேவி தற்போது WWE எனப்படும் பொழுதுபோக்கிற்கான சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
கவிதா தேவியை பாராட்டி, CWE தரப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தியிருந்தனர். அந்த வீடியோவையும் கீழே இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மேற்கண்ட வீடியோ உண்மையில், CWE எனப்படும் இந்திய துணைக்கண்ட வீரர்களுக்கு நடத்தப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டியின்போது எடுக்கப்பட்டதாகும்; குத்துச்சண்டைப் போட்டி அல்ல.
2) அதில் இருப்பவர்கள் பாகிஸ்தானியரும் அல்ல; தமிழரும் அல்ல. அவர்களின் பெயர், Kavita Devi Dalal மற்றும் BB Bull Bull ஆகும். இதில், கவிதா ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். பிபி புல் புல் இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் மல்யுத்த வீரர் ஆவார்.
3) பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் தொழில்முறை மல்யுத்தப் போட்டி வீடியோ காட்சியை எடுத்து வைத்துக் கொண்டு, தவறான தகவல் பரப்பியுள்ளனர்.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 தகவல் தெரிவியுங்கள்.

Title:பாகிஸ்தான் குத்துச்சண்டை வீராங்கனையுடன் மோதிய தமிழ்ப் பெண் கவிதா தேவி- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
