
கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது, என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி உரிமம் வழங்குவது மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்க இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
#இந்தியாவின் மிகபெரிய மாநிலத்தில் #யோகிஅரசு அதிரடி உத்தரவு.. அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது அப்படி இல்லை எனில் விளம்பரம் இருக்கும் சேனல்களில் #கட்டணம்கேட்கக்கூடாது #விளம்பரங்களுக்குகோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் #சேனல்களுக்குகட்டணம் கிடையாது என்று #யோகி அறிவித்துள்ளார் இதை நாமும் வரவேற்போம்.. #மக்கள்அரசு என்பது இதுதான்..
கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது. விளம்பரம் இருக்கும் சேனல்கள் கட்டணம் கேட்கக் கூடாது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விளம்பரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கு கட்டணம் கிடையாது என்று யோகி அறிவித்துள்ளதாக விஜய் ஆனந்த் என்பவர் கடந்த ஏப்ரல் 13ம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளர்.
இதை நாமும் வரவேற்போம், மக்கள் அரசு என்பது இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அரசு என்பது இதுதான் என்ற வார்த்தை, நம்முடைய மாநில அரசும் இப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தேர்தல் நேரம் என்பதாலும் யோகி ஆதித்யநாத் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் இதை பா.ஜ.க-வினர் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில், கேபிள் டி.வி-க்கான புதிய கட்டண விதிமுறையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது. முதலில், பிப்ரவரி 1ம் தேதி அமலாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனால் கேபிள் டி.வி-க்கான குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் ரூ.153.40 ஆனது. இதில், 100 இலவச சேனல்கள் வரை பார்த்துக்கொள்ளலாம். கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் அதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவியதாலும் வழக்குகள் தொடரப்பட்டதாலும், புதிய கட்டண விதிப்பை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை டிராய் நீட்டித்தது. தற்போது புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட்டது. இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், “விளம்பரம் ஒளிபரப்பக் கூடாது என்று அனைத்து கட்டண சேனல்களுக்கும் உத்தரபிரதேச முதல்வர் அதிரடி உத்தரவு” என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் வசூலிக்கும் தொலைக்காட்சிகள் தங்கள் டி.வி-யில் விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி ஒளிபரப்பு எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொலைத்தொடர்பு, தொலைக்காட்சியின் கட்டணங்களை நிர்ணயிக்க, கட்டணத்தை மாற்றி அமைக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் என்ற டிராய் உள்ளது. இது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதற்கு மாநில அரசுகள், உத்தரவு பிறப்பிக்க முடியாது. டிராய் உத்தரவை எதிர்த்து டிடிஎஸ்ஏடி என்ற மேல்முறையீட்டு அமைப்பிடம் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

அப்படி இருக்கும்போது யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக கூகுளில் ஏதேனும் செய்தி வெளியாகி இருக்கிறதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

தொலைபேசி, தொலைக்காட்சி நிறுவனங்களை எல்லாம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்தான் கட்டுப்படுத்துகிறது. கட்டண விகிதங்கள் எல்லாம் டிராய் உத்தரவுபடியே நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார் என்பது தேர்தல் நேரத்தில் பரப்பப்பட்டுள்ள வதந்தி என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:கட்டண சேனல்களில் விளம்பரம் கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
