போலீஸ் முன்னிலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கத்தியோடு பயணிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. டெல்லி கலவரத்தின்போது எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் இந்த படத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

போலீஸ் அதிகாரி ஒருவர் பின்னால் கை கட்டிக்கொண்டு நிற்கிறார். அவருக்கு முன்பாக இருசக்கர வாகனம் ஒன்றில் காவி சட்டை, துண்டு அணிந்த மூன்று பேர் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்கின்றனர்.

நிலைத் தகவலில், "டெல்லியில் துப்பாக்கி, கத்தியுடன் அலையும் சங்கிகள். காவல் துறை துணையுடன் தான் எல்லாம் நடக்கிறது என்பது வெளிச்சமாக தெரிகிறது. Delhiviolence" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, திராவிடன் துரை என்பவர் 2020 பிப்ரவரி 25 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி கலவரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையில் பல்வேறு பதிவுகள் வெளியாகின்றன. எனவே, சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை அப்படியே நம்பிவிடாமல், அது உண்மையா என்று ஆய்வு செய்து பகிர்வது நல்லது.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த படத்தை டெல்லி கலவரத்தின்போது எடுக்கப்பட்டது என்று பலரும் ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது.

தொடர்ந்து தேடியபோது, இந்த படம் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்றும் யோகி ஆதித்திய நாத்தின் குண்டர்கள் ஆட்சி என்றும் சிலர் இதை ஷேர் செய்திருந்தனர்.

Search LinkTwitter LinkArchived Link

இந்தி செய்தி இணையதளம் ஒன்று இந்த படத்தை தன்னுடைய செய்தியில் பயன்படுத்தி இருந்தது. அதுவும் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் தொடர்பான கட்டுரை அது. அதில் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. இதையடுத்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. ஆனால், இந்த படம் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை.

Facebook LinkArchived Link 1
pramonews.inArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

இந்த புகைப்படம் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.

2018ம் ஆண்டு முதல் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்த புகைப்படம் 2020 பிப்ரவரி டெல்லி கலவரத்தின்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:போலீஸ் முன்னிலையில் கத்தியை காட்டும் நபர்களின் புகைப்படம்; டெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False