
பாகிஸ்தானிடம் சிக்கி, பின்னர் பத்திரமாக விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் ஒரு பிராமணர் என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரம் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.
வதந்தியின் விவரம்:
எங்களுக்கு மணி அடிக்கவும் தெரியும்
மண்டையை பிளக்கவும் தெரியும்.
இந்தியன் டா நாங்க.
Archive Link
இவ்வாறு அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. அதில் உள்ள புகைப்படத்தில், 2 பேர் சிரித்தபடி நிற்கின்றனர். ஒருவர் நடுத்தர வயதில் உயரமாக, வேஷ்டி அணிந்து, நெற்றியில் நாமம் இட்டுள்ளார். மேல் சட்டை இன்றி நிற்கும் அவர் பூணுல் அணிந்துள்ளார். மற்றொரு நபர், வயது முதிர்ந்த நிலையில், பேண்ட் சட்டை அணிந்தும் நிற்கிறார். உயரமாக பூணுல் அணிந்தபடி நிற்கும் நபர்தான் ‘’வீரத்திருமகன் அபிநந்தன்’’ என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பி, 2000-க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
கடந்த பிப்ரவரி 27ம் தேதியன்று பாகிஸ்தானுக்குச் சொந்தமான போர் விமானங்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சித்தன. இதன்போது, தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் வர்தமான் உள்ளிட்ட 3 விமானிகள், மிக் 21 ரக விமானங்களில் ஏறி, பாகிஸ்தானிய போர் விமானங்களை விரட்டிச் சென்றனர். அதில், அபிநந்தன் பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான எஃப்16 ரக விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார். ஆனால், எதிர்பாராவிதமாக, அவரது விமானம் பாகிஸ்தானியரால் சுடப்படவே, அபிநந்தன் பாகிஸ்தானில் தரையிறங்க நேரிட்டது. அவரை உள்ளூர் மக்கள் தாக்கிய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிருடன் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுபற்றிய வீடியோ காட்சியை நமது வாசகர்கள் இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.
மேலும், அபிநந்தன் கைது செய்யப்பட்ட தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அபிநந்தனை, சர்வதேச போர் விதிமுறைகளுக்கு உள்பட்டு, நல்லெண்ண அடிப்படையில், விடுதலை செய்வதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிப்ரவரி 28ம் தேதியன்று அறிவித்தார். இம்ரான் கான் பேசியதன் விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மார்ச் 1ம் தேதி இரவு, அபிநந்தன் வர்தமான் வாகா எல்லை வழியாக அழைத்து வரப்பட்டு, பாகிஸ்தானிய அதிகாரிகளால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுபற்றிய வீடியோ பதிவு கீழே
இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின் அபிநந்தன் வர்தமான், இந்திய அளவில் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டு வருகிறார். இளைஞர்கள் அவரைப் போலவே, நீண்ட மீசை வைத்துக் கொள்வதும் டிரெண்ட் ஆகியுள்ளது. செய்தி விவரம் இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளது. அத்தகைய நீண்ட மீசை புகைப்படத்தில் இருப்பவருக்கு இல்லை.
அதேசமயம், அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் ஜாதி என்ன என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்ட தொடங்கினர். ஒருகட்டத்தில், அபிநந்தன் வர்தமான், சமண மதத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவரவே, பலர் அவரது ஜாதி பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டனர். ஆனால், பிராமணர்கள் குறிப்பாக, பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்டவர்கள், அபிநந்தனை பயன்படுத்தி, தேர்தல் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். அத்துடன், அவரை பிராமணராக சித்தரித்து, இந்துக்களில் பிராமணர்கள் வீரம் நிறைந்தவர்கள் என்பது போலவும் சித்தரித்து வருகின்றனர். அதன் வெளிப்பாடே கீழே உள்ள புகைப்படம் ஆகும். இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரும், பூணுல் அணிந்து, திடீரென பார்ப்பதற்கு அபிநந்தன் போலவே தோன்றுகிறார். இதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.
ஆனால், அபிநந்தன் சற்று நடுத்தர உயரமானவராக, முக அமைப்பு குறுகியதாகவும் இருப்பார். இந்த புகைப்படத்தில் இருப்பவருடன் ஒப்பிடுகையில், அபிநந்தனின் தோற்றம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதேபோல, அபிநந்தனின் தந்தையும் உயரமானவராக இருப்பார். ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அபிநந்தனின் தந்தை சிம்மக்குட்டி வர்தமான் (ஏர் மார்ஷல் – ஓய்வு)
அபிநந்தன் குளோஸ்-அப் புகைப்படம்.
இது மட்டுமின்றி, அபிநந்தன் பிராமணர் இல்லை. அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர் ஆவார். பாகிஸ்தானியரால் அவர் சிறைபிடிக்கப்பட்ட நாட்களில், அவரது பிறந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், திருப்பானமூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கரந்தை, வேம்பாக்கம் பகுதிகளில் உள்ள சமண கோவில்களில் அப்பகுதி மக்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதுபற்றிய செய்தியின் இணைப்பை, இங்கே கிளிக் செய்து வாசகர்கள் படிக்கலாம்.
நாம் கண்டறிந்த உண்மையின் விவரம்,
1. அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பானமூர் ஆகும். அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர். இது ஆதாரப்பூர்வமாக மேலே நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. குறிப்பிட்ட புகைப்படம், பிராமண ஆதரவு மனப்பான்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசபக்தி என்ற பெயரில் போலி புகைப்படங்கள் எளிதில் பகிரப்படுகின்றன என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
3. அபிநந்தன் மற்றும் அவரது தந்தையின் உருவமும், புகைப்படத்தில் இருக்கும் நபர்களின் உருவமும் எளிதில் வேறுபடுகிறது. நன்கு உற்று பார்த்தால் அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு தெரிகிறது.
4. யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த தனிப்பட்ட புகைப்படத்தை எடுத்து, தங்களது பிரசாரத்திற்காகச் சிலர் பயன்படுத்தியதும், இதன்மூலமாக தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் அபிநந்தன் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Title:அய்யர்லயே நாங்க ரவுடி அய்யராக்கும்: வைரலாகும் அபிநந்தனின் போலி புகைப்படம்
Fact Check By: Parthiban SResult: False
