அஜித்தை வம்புக்கு இழுத்தாரா குறளரசன்?

அரசியல் | Politics சினிமா | Cinema

திரைப்பட நடிகர் அஜித், அரசியலுக்கு வர வேண்டும் என்று பிரபல இயக்குநர் சுசீந்திரன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு டி.ராஜேந்தரின் மகன் குறளரசன் சர்ச்சைக்குரிய வகையில் பதில் ட்வீட் செய்ததாகக் கூறி தமிழ் இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில், உண்மை உள்ளதா என்று நாம் ஆய்வைத் தொடங்கினோம்.

வதந்தியின் விவரம்:

அடுத்த முதல்வர் எங்க அப்பாதான்? அஜித்தை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிய குறளரசன்

கீழே உள்ள ஆதார புகைப்படங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணைப்புகளை பார்க்கவும்.

Archive link

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தமிழக அரசியல் களம் சூடாக உள்ளது. இந்த சூழலில் அரசியல் தொடர்புடைய பதிவுகள் அதிக அளவில் வைரல் ஆகின்றன. அதிலும், தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் அஜித்தை சீண்டும் வகையில் பதிவு ட்விட்டரில் வெளியானது என்று செய்தி வெளியிட்டதால் அதிக அளவில் ஷேர், கமெண்ட் செய்யப்பட்டுள்ளது. டி.ராஜேந்தர் பற்றி தமிழக மக்கள் மனதில் குறிப்பிட்ட செல்வாக்கு உள்ளது. அவருடைய மூத்த மகன் சிம்புவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. டி.ராஜேந்தரின் மகன், சிம்புவின் தம்பி என்ற வகையில் குறளரசனின் பதிவு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக, இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் உடனடியாக ஊடகங்களில் செய்திகள், பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.

உண்மை அறிவோம்

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் அஜித். அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நன்மதிப்பைப் பெற்றவர். இதனால், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க-வின் தலைமையை ஏற்க அஜித் வர வேண்டும் என்கிற அளவுக்கு வதந்திகள் பேசப்பட்டதும் உண்டு. இதைப் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரன், அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். “வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும், பல கோடி மக்களில் நானும் ஒருவன்” என்று அதில் அவர் தெரிவித்திருந்தார். இதில் உற்சாகமான அஜித் ரசிகர்கள், அந்த ட்விட்டர் பதிவை அதிக அளவில் ரீட்வீட் செய்திருந்தனர். 17 ஆயிரம் லைக்ஸ், 5.7 ஆயிரம் ரீட்வீட், 1.5 ஆயிரம் கமெண்ட் என்று அந்த பதிவு பட்டையை கிளப்பியது.

Archive link

இதற்கு பதில் அளிக்கும் வகையில் குரான் அரசன் டி.ராஜேந்தர் என்ற பெயரில் ஒரு பதிவு வெளியாகி இருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. அதில், “இவரு வேற குறுக்க மறுக்க, ஓடிக்கிட்டுருக்காரு. எங்க அப்பாதான்யா அடுத்த முதல்வர்” என்று கூறப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட, குரான் அரசன் டி.ராஜேந்தர் ஐடி பெயரில் வெளியான மற்றொரு பதிவில், “உண்மை சில நேரங்களில் அற்ப நகைச்சுவையாகத் தோன்றும்.” என்றும் கூறப்பட்டிருந்தது.

இன்னொரு பதிவில், “தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும்” எனவும் கூறப்பட்டிருந்தது.


உண்மையில் இதை வெளியிட்டது குறளரசன் தானா என்று ஆய்வைத் தொடங்கினோம். பிரச்னை பெரிதாகவே, Kuran Arasan T Rajendar என்ற ட்விட்டர் பக்கம் அகற்றப்பட்டுவிட்டது.

பொதுவாக பிரபலங்களின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்கள் வெரிஃபைடாக இருக்கும். அதாவது, அவர்கள் பெயருக்கு பக்கத்தில் நீல நிற டிக் குறியீடு இருக்கும். ஆனால், இந்த ட்விட்டர் பதிவில் குரான் அரசன் பெயருக்கு அருகில் அப்படி எந்த ஒரு வெரிஃபைடு டிக்கும் இல்லை. எனவே, இது போலியாக இருக்கலாம் என்று தெரிந்தது.

மேலும், இது ட்விட்டர் பதிவே கிடையாது. கீழே உள்ள புகைப்படத்தில் குறளரசன் பெயருக்கு கீழே 2 ஆட்கள் இருப்பது போன்ற ஒரு லோகோவை நீங்கள் பார்க்கலாம். பொதுவாக, ஃபேஸ்புக் ஐடிகளுக்குத்தான் அத்தகைய லோகோ இருக்கும். இந்த பதிவு, நண்பர்கள் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் பகிரப்பட்டிருக்கிறது. அதனால்தான், அதில் 2 பேர் இருப்பதுபோன்ற லோகோ உள்ளது.  ஃபேஸ் புக் பக்கத்தில் தேடியபோதும் அதுபோன்ற பதிவு கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை பரிசோதிக்காமல் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இதனால், இது சர்ச்சையாக மாறியுள்ளது. அதில் ஒன்றுதான் நாம் மேலே குறிப்பிடும் ஏஷியாநெட் செய்திப் பதிவும். ஏஷியாநெட் வெளியிட்ட செய்திக்கு, 249 பேர் ரியாக்ட் செய்திருந்தனர். 48 கமெண்ட், 7 ஷேர் செய்யப்பட்டிருந்தது. இது தவிர, இந்த பதிவை மட்டும் எடுத்து பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இது தொடர்பாக ஏஷியாநெட் தவிர்த்து வேறு எந்த எந்த செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று கூகுளில் தேடினோம். அப்போது, நியூஸ்18 தமிழ், குமுதம் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களும் செய்தி வெளியிட்டது தெரியவந்தது.

இதில், குமுதம் வெளியிட்ட செய்தி சில மணிநேரத்தில் நீக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பதிவுக்கு 835 பேர் ரியாக்ட் செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்திருந்தனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் கமெண்ட் செய்திருந்தனர்.

படம்: ஃபேஸ்புக்கில் உள்ள குமுதத்தின் பதிவு

Archive link

படம்: குமுதம் இணையதளத்தில் குறிப்பிட்ட கட்டுரை இல்லாதது பற்றிய விவரம்.

நியூஸ்18 தமிழ் தளத்தில், “அஜித்தை விமர்சித்து பேஸ்புக் பதிவு! சர்ச்சையில் சிக்கிய குறளரசன்” என்று செய்தி வெளியாகி இருந்தது. (பின்னர் அந்த செய்தியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தலைப்பு மட்டும் அப்படியே இருந்தது. இதனால், தலைப்பு தவறான புரிதலை வாசகர்களுக்கு வழங்குவது தெரியவந்தது. இது ட்விட்டரிலும் பகிரப்பட்டிருந்த்தது. இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

குறளரசன் உண்மையில் அப்படி பதிவிட்டிருந்தாரா என்பதை உறுதி செய்ய, சென்னை டி.நகரில் உள்ள டி.ராஜேந்தர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். அங்கு இருந்தவர்கள், “அப்படி ஏதும் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் இது தொடர்பாக டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்” என்றனர்.

மார்ச் 18, 2019 மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “தனக்கும் தன்னுடைய மகனுக்கும் சமூகவலைத்தளங்களில் தனிப் பக்கங்கள் ஏதும் இல்லை. வெரிஃபைடு அக்கவுண்ட் ஏதும் இல்லை. என் மகன் பெயரில் வந்த ட்விட்டர் பதிவு போலியானது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்” என்றார். இது தொடர்பான வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

சில வாரங்களுக்கு முன்புதான், குறளரசன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறினார். இதை அவரது குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், சமூகவலைத்தளத்தில் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. குறளரசனை திட்டித் தீர்த்துப் பதிவிட்டனர் பலர்.

இதுதவிர, அஜித் பற்றி யாரேனும் பேசினால், அதனை டார்கெட் செய்யும் வகையில், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமான பதிவுகளை வெளியிடுவதும் வழக்கம். இதன் அடிப்படையிலும், இந்த விவகாரம் நிகழ்ந்திருக்கலாம்.

இதுபோன்ற நமக்குக் கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கையில், குறளரசனை விரும்பாதவர்கள் யாரோ போலியாக அக்கவுண்ட் உருவாக்கிப் பதிவிட்டது உறுதியாகத் தெரிகிறது. சம்பந்தப்பட்ட நபரின் தந்தையே இதை மறுத்துவிட்ட சூழலில், தொடர்ந்து குறளரசனுக்கு எதிராக பதிவுகள் இடுவது, தவறான பதிவை ஷேர் செய்வது சரியானதாக இருக்காது. மேலும், இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்போவதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளனர்.

நாம் தெரிந்துகொண்ட உண்மையின் விவரம்,
1) குறிப்பிட்ட ஐடி ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
2) குரான் அரசன் பெயர் வெரிஃபைடு பக்கமாக இல்லாமல் இருந்தது.
3) குறளரசனுக்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கே இல்லை என்று அவரது தந்தை டி.ராஜேந்தர் மறுப்பு கூறியுள்ளார்.
4) குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறியதை தொடர்ந்து, அவருக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவில் எதிர்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில், அவருக்கு யாரேனும் களங்கம் ஏற்படுத்த முயன்றிருக்கலாம்.
5) குறளரசன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உள்ளவர்கள், அல்லது சுசீந்திரனையும், அஜித் ரசிகர்களையும் சீண்டும் வகையிலும் விஜய் ரசிகர்கள் இப்படி ஃபேக் ஐடி உருவாக்கி, பதிவிட்டிருக்கலாம்.
6) உண்மைத்தன்மையை பரிசோதிக்காமல் ஊடகங்கள் உடனடியாக இதனை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

முடிவு

உரிய ஆதாரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது குறளரசன் பதிவிட்டதாக வெளியான இந்த தகவல் போலியான ஒன்று என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது பார்வையாளர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:அஜித்தை வம்புக்கு இழுத்தாரா குறளரசன்?

Fact Check By: Praveen Kumar 

Result: False