
விருதுநகர் தி.மு.க இளைஞரணி மாநாட்டில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினை நோக்கி செருப்பு வீசப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வரும்போது அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், “முதல்வரின் கவனத்தை ஈர்க்க கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டுள்ளது! தொடர்ந்து விவாதிப்போம்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “முதல்வர் மீது செருப்பு வீசியது யார் ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிப்ரவரி 7, 2026 அன்று விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி என்ற இடத்தில் தி.மு.க இளைஞரணி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி யாரோ செருப்பை வீசியதாக புகைப்படத்துடன் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக செய்தி ஏதும் இல்லை.
உண்மையில் அப்படி நடந்திருந்தால் புதிய தலைமுறை, தந்தி டிவி என எல்லா ஊடகங்களிலும் பெரிய அளவில் செய்தியாகி இருக்கும். குறைந்த பட்சம் அதிமுக-வின் நியூஸ் ஜெ-விலாவது வந்திருக்கும். ஆனால் எதிலும் அப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. எனவே, இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.

தி.மு.க இளைஞரணி மாநாட்டுக் காட்சிகளை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் சன் நியூஸ் லோகோ இருந்ததால் அந்த ஊடகத்தில் வெளியான வீடியோவை தேடி எடுத்தோம். வீடியோவின் 3.50வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள காட்சி வருகிறது. மு.க.ஸ்டாலினுக்கு வலது பக்கத்தில் தொண்டர் ஒருவர் கொடி அல்லது சால்வை போன்று ஒன்றைக் கொடுப்பதைக் காண முடிகிறது. அந்த நேரத்தில் அதற்கு முன்பாகவோ, அதற்கு பின்பாகவோ செருப்பு எதுவும் அந்த வீடியோவில் வீசப்படவில்லை.
சன் டிவி தி.மு.க ஆதரவு ஊடகம் என்பதால் மற்ற ஊடகங்களில் வெளியான வீடியோக்களையும் பார்த்தோம். குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டுமின்றி வேறு எந்த ஒரு இடத்திலும் செருப்பு வீசப்பட்டது போன்று இல்லை. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் போலியானது, எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி செருப்பு வீசப்பட்டது போல் பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram
Title:தி.மு.க இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது செருப்பு வீசப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Altered


