
“பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது” – என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் புகைப்படங்களுடன் சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது.
அதில், “பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை!
1) மாறி மாறி கூட்டணி வைத்து பச்சோந்தி போல் நான் செயல்பட்டிருக்கக் கூடாது!.
2) கார், பார் உள்ளளவும் கழகங்களோடு கூட்டணி இல்லை என்ற பிறகு அ.திமுகவோடு கூட்டணி சேர்ந்திருக்கக் கூடாது!
3) அதிமுகவின் ஊழல் புகார்களை ஆளுநரிடம் வழங்கிவிட்டு அதிமுகவோட கூட்டணி சேர்ந்தது மாபெரும் தவறு!
4) வன்னியர் மாநாட்டில் கலவரம், இரயில் மீது கல் போன்ற செல்களினால் பாமக அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது!
5) எல்லாவற்றிற்கும் மேலாக நான் பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Saravanan Salemcamp என்பவர் 2020 டிசம்பர் 31ம் தேதி பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பார்க்க சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே உள்ளது. இருப்பினும் கூர்ந்து கவனித்தால் ஐந்து புள்ளிகளும் தனியாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. பின்னணி டிசைன் அகற்றப்பட்டிருப்பதை காண முடிகிறது. இது போலியானது என்று நமக்குத் தெரிந்தாலும் பலரும் இதை ஷேர் செய்து வருவதை காண முடிகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

சன் நியூஸ் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் 31 டிசம்பர் 2020 அன்று வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, ராமதாஸ், அன்புமணி படத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்றை சன் நியூஸ் வெளியிட்டிருப்பது தெரிந்தது.
அதில், “பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை.
1) அரசியல் மாற்றம் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு, கனவாகவே போகுமா?
2) என்னுடைய வாழ்நாளில் இனி அரசியல் மாற்றத்தை காண முடியாதா?
3) பாமக சார்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலை உள்ளது.
4) நான் உங்களை சரியாக வழிநடத்தாததே இதற்கு காரணமோ என நினைத்தேன். ஆனால் கோளாறு உங்களிடம்தான்.
5) கடந்த தேர்தலில் நிர்வாகிகள் சரியாக வேலை செய்யாததே அன்புமணி தோல்வியுற காரணம்” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதை எடிட் செய்து டாக்டர் ராமதாஸ் கூறாத தகவலை சேர்த்து பகிர்ந்து வருவது தெரிந்தது.
இது குறித்து சன் நியூஸ் ஆன்லைன் பிரிவு ஊழியர் மனோஜை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் மூலம் சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியானது.
2020 டிசம்பர் 31ம் தேதி நடந்த கூட்டத்தில் கூட்டணி மாற்றம், அ.தி.மு.க மீதான ஊழல் புகார் பற்றி எல்லாம் ராமதாஸ் பேசியிருந்தாரா, இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
பா.ம.க மூத்த நிர்வாகி ஒருவரை தொடர்புகொண்டு இது பற்றி கேட்டோம். அந்த கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். இது பொய்யான தகவல், டாக்டர் ராமதாஸ் அப்படி பேசவில்லை என்று அவரும் உறுதி செய்தார்.
இதன் அடிப்படையில், டாக்டர் ராமதாஸ் தொடர்பான சன் நியூஸ் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:FACT CHECK: பெட்டி அரசியல் செய்திருக்கக் கூடாது; ராமதாஸ் பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
