FACT CHECK: தன் பெயரை அ.தி.மு.க, பா.ஜ.க பயன்படுத்தக் கூடாது என்று ரஜினி அறிக்கை வெளியிட்டாரா?
தன்னுடைய பெயர், புகைப்படத்தை அ.தி.மு.க, பா.ஜ.க பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக, சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "பாஜகவுக்கும் அதிமுகவும் எக்காரணம் கொண்டும் எனது பெயரையோ என் புகைப்படங்களையோ தேர்தலில் பயன் படுத்தக் கூடாது" என்று உள்ளது.
இந்த பதிவை 2021 ஜனவரி 2ம் தேதி Muthulakshmi Rangasami Dmk என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அரசியல் கட்சி தொடங்கி பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி அறிவிப்பு இக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ரஜினிகாந்த் வாய்ஸ் கண்டிப்பாக பா.ஜ.க-வுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், தன்னுடைய பெயரை, புகைப்படத்தை பா.ஜ.க, அ.தி.மு.க ஆகியவை பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் கூறிவிட்டதாகப் பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள் இதை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு நடத்தினோம்.
ரஜினிகாந்த் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் செய்தி, சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டிருக்கும். மிகப்பெரிய விவாதமாகவே அது மாறியிருக்கும். அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்ற அறிவிப்புக்குப் பிறகு ரஜினிகாந்த் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பதே உண்மை.
இந்த நியூஸ் கார்டில் டிசம்பர் 29, 2020 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அரசியல் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்த தினம். அந்த அறிக்கையில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகியவை தன்னுடைய பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளாரா என்று பார்த்தோம். அவருடைய அறிக்கையில் அப்படி எந்த ஒரு வார்த்தையும், கருத்தும் இல்லை.
இந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. தமிழ் ஃபாண்ட் வழக்கமாக சன் நியூஸ் தமிழ் பயன்படுத்துவது போல இல்லை. மேலும், கருத்து இடம் பெற்ற பகுதி மட்டும் தனியாக எடிட் செய்து வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
2020 டிசம்பர் 29ம் தேதி சன் நியூஸ் தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். ரஜினியின் இந்த புகைப்படத்துடன் சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், "நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கும்; என்னை மன்னியுங்கள்!" என்று இருந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை எடுத்து, எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. சன் நியூஸ் தமிழ் ஆன்லைன் பிரிவு ஊழியர் மனோஜை தொடர்புகொண்டு பேசினோம். அவர், இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்தார்.
இதன் மூலம் தன்னுடைய பெயர், புகைப்படத்தை அ.தி.மு.க, பா.ஜ.க பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் கூறியதாக பகிரப்படும் சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரஜினிகாந்த் கூறியதாக பகிரப்படும் சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:தன் பெயரை அ.தி.மு.க, பா.ஜ.க பயன்படுத்தக் கூடாது என்று ரஜினி அறிக்கை வெளியிட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered