
அத்துமீறிய பாஜக நிர்வாகிகள் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அத்து மீறிய நிர்வாகிகள்; பகீர் ஆதாரங்களுடன் காயத்ரி ரகுராம். கட்சிக்குள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருவதற்காகவே திருச்சி சூர்யா – டெய்சி ஆடியோவை வெளியிட்டேன். பாஜக முக்கிய நிர்வாகிகள் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்கான நிறைய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. – பாஜாகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டு பதிவை Sankar Pechimuthu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 22ம் தேதி பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாஜக வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம் அந்த பொறுப்புகளிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு காயத்ரி ரகுராம் பேட்டி அளித்து தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்தார். அவர் பேட்டி அளித்ததை வைத்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
பாஜக நிர்வாகிகள் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே, அவருடைய பேட்டி முழு வீடியோவை பார்த்திருந்தோம். அதில் அவர் அப்படி கூறவில்லை. எனவே. ஜூனியர் விகடனுக்கு சிறப்பு நேர்காணல் ஏதும் அளித்துள்ளாரா, அதை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளதா என்று அறிய ஆய்வு செய்தோம்.
ஜூனியர் விகடன் 2022 நவம்பர் 22ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு இருந்தது. ஆனால் அதில், “உண்மையை பேசியதற்காகவே நீக்கப்பட்டிருக்கிறேன்! உண்மையைப் பேசியதற்காகவே கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். பாஜக நிர்வாகி செல்வக்குமார் என்பவர் சார்பாக பல ட்ரோல்கள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையில் என்னை யார் தாக்கினாலும் நான் பதிலடி கொடுப்பேன். இது என்னுடைய உரிமை. ஆனால், அதை தவறு என்றும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி சஸ்பெண்ட் செய்திருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது! – காயத்ரி ரகுராம்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து போலியான நியூஸ் கார்டை உருவாக்கிப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதை உறுதி செய்துகொள்ள ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் குறிப்பிட்டது போன்று செய்தி எதுவும் வெளியாகவில்லை. இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அத்துமீறிய பாஜக நிர்வாகிகள் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக நிர்வாகிகள் அத்துமீறில் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Title:பாஜக நிர்வாகிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆதாரம் உள்ளது என காயத்ரி ரகுராம் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
