
நீட் விவகாரத்தில் தி.மு.க பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்து கொண்டிருக்கிறதா என்ற அச்சம் எழுந்திருக்கிறது என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Facebook
புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. தி.மு.க பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துகொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுகிறது? – ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆதங்கம்” என்று இருந்தது.
இந்த நியூஸ் கார்டை 2021 செப்டம்பர் 15 அன்று Rajini Kanth என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
செய்தியாளர் செந்தில் புதிய தலைமுறையில் பணியாற்றவில்லை. வேறு ஒரு ஊடகத்தில் பணியாற்றி வருகிறார். இதுதவிர, சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது அவருடைய கருத்தை புதிய தலைமுறை வெளியிட்டது போல மேலே பகிரப்படுவது நம்பும் வகையில் இல்லை. இருப்பினும் நியூஸ் கார்டு டிசைன், தமிழ் ஃபாண்ட் எல்லாம் பார்க்க அச்சு அசலாக புதிய தலைமுறை வெளியிட்டது போலவே இருந்தது.
எனவே, இது பற்றித் தெரிந்துகொள்ள 2021 செப்டம்பர் 15ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு இல்லை.செப்டம்பர் 15ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட ஏதோ ஒரு நியூஸ் கார்டை எடுத்து, எடிட் செய்து தங்கள் விருப்பம் போல பொய்யான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவது உறுதியானது.

இதை மேலும் உறுதி செய்ய, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். “நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியானதுதான்” என்று அவரும் உறுதி செய்தார். இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.
ஒருவேளை செந்தில்வேல் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டாரா என்று அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதிலும் அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை.
செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு இருந்தது.
Archive
இதன் மூலம் வேண்டுமென்று பொய்யான தகவலை பரப்பும் நோக்கில் இந்த நியூஸ் கார்டை இவர்கள் வெளியிட்டிருப்பது உறுதியாகிறது.
முடிவு:
நீட் விவகாரத்தில் தி.மு.க பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்துகொண்டு இருக்கிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது என்று செய்தியாளர் செந்தில் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தி.மு.க மீது சந்தேகம் எழுந்துள்ளது என்று செந்தில்வேல் கூறியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
