உ.பி தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக செய்தியாளர் செந்தில் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக பத்திரிகையாளர் செந்தில் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

செய்தியாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்திரிகையாளர் செந்தில் சபதம். உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய செல்கிறேன். பாஜகவை வீழ்த்தாமல் தமிழ்நாடு திரும்ப மாட்டேன். ஒரு வேளை பாஜக அங்கே மீண்டும் வெற்றி பெற்றால் கங்கை நதியில் எனது உயிரை மாய்த்து கொள்வேன். இது என் தமிழ் மேல் ஆணை. பத்திரிக்கையாளர் செந்தில் சபதம்” என்று இருந்தது.

இந்த பதிவை பாஸ்கரன் ந என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 17ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

செய்தியாளர் செந்தில் அரசியல்வாதி போல சித்தரித்து நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. செந்தில்வேல் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு போலியான தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவை பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் ஏற்கனவே சில கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

இந்த சூழலில் தேர்தல் பிரசாரத்துக்காக உத்தரப்பிரதேசம் செல்ல உள்ளதாகவும், பா.ஜ.க வெற்றி பெற்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று செந்தில்வேல் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றுவிடும், அறிவித்தது போல் செந்தில்வேல் உயிர்விட வேண்டும் என்று அவர்கள் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

வேறு ஒரு ஊடகத்தில் பணி புரிபவர் வெளியிடும் கருத்தைத் தந்தி டி.வி வெளியிட வாய்ப்பு இல்லை. நியூஸ் கார்டில் அது வெளியான தேதி இல்லை. அகற்றப்பட்டிருந்தது. மேலும், இந்த நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் அனைத்தும் இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்கின்றன. ஆனால், இதையும் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்வையிட்டோம். உத்தரப்பிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் தந்தி டிவி-யில் வெளியாகவில்லை.

அடுத்ததாக செய்தியாளர் செந்தில் உத்தரப்பிரதேச தேர்தல் பரப்புரைக்காக செல்வதாக ஏதும் அறிவிப்பு வெளியிட்டாரா என்று அவருடைய சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு செந்தில் வேல் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அதில், “FAKE” என்று குறிப்பிட்டுவிட்டு அதற்குக் கீழ், “அதெல்லாம் இருக்கட்டும்.. உ.பி-யில் மீதமிருக்கும் உங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களையாவது பிடித்து வைங்க. போகும் வேகத்தைப் பார்த்தால் யோகியே சமாஜ்வாதி கட்சியில் இணைந்தாலும் ஆச்சரியமில்லை” என்று நக்கல் செய்திருந்தார்.

இதன் மூலம் செய்தியாளர் செந்தில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன் என்று அறிவித்ததாகப் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேச தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன் என்று செய்தியாளர் செந்தில் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உ.பி தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக செய்தியாளர் செந்தில் கூறினாரா? ?

Fact Check By: Chendur Pandian 

Result: False