தி.மு.க-வின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதாகவும், தி.மு.க படுதோல்வி அடையும் என்றும் உளவுத் துறை ஆய்வில் தெரியவந்ததால் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "சரிந்தது திமுகவின் வாக்கு வங்கி. அதிர்ச்சியில் திமுக. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையுமென தமிழக தேர்தல் உளவுத்துறையின் ரகசிய ஆய்வில் தகவல். - ஸ்டாலின் கலக்கம்" என்று இருந்தது.

நிலைத்தகவலில், "ஆடாதடா ஆடாதடா மனுஷா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனுஷா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை அபராஜிதா அபி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மார்ச் 18ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் தமிழ் ஃபாண்ட் இல்லை, பின்னணி டிசைன் இல்லை. தமிழக போலீசில் உளவுத் துறை உள்ளது. ஆனால், தேர்தல் உளவுத் துறை என்று புதிதாக ஒன்றை உருவாக்கிப் பகிர்ந்துள்ளனர். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போதே இது நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது இல்லை என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் இதையும் பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

நியூஸ் கார்டில் 2020 செப்டம்பர் 19ம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உளவுத் துறை அரசுக்கு கொடுத்த அறிக்கை என்பது ரகசியமானது. அது பற்றி பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக காவல் துறையினர் தெரிவிக்க மாட்டார்கள். எனவே, ஆய்வு முடிவு இப்படியாக வந்ததா என்று உளவுத் துறையினரிடம் விசாரிக்க முடியாது.

எனவே, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு கேட்டோம். இந்த நியூஸ் கார்டை பார்த்ததும் அவர் போலியானது என்று நம்மிடம் கூறிவிட்டார். பலரும் இதை ஷேர் செய்து வரும் விஷயத்தை கூறவே, ‘’இது போலியான நியூஸ் கார்டு என்று எங்கள் ஃபேஸ்புக் பக்கத்திலேயே பதிவிடுகிறோம்,’’ என்றார். அதன் படி நியூஸ் 7 தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்றும் பதிவிடப்பட்டது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடையும் என்று உளவுத்துறை அறிக்கை அளித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தி.மு.க தோல்வி அடையும் என உளவுத்துறை அறிக்கை கொடுத்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தி.மு.க வாக்கு வங்கி சரிந்தது என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered