
‘’உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில் மட்டும் வருகை தரும் பறவைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில், கோயில் கோபுரம் ஒன்றை பறவைகள் கூட்டமாகச் சுற்றி வரும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் கோவிலில் மாக சிவராத்திரியன்று பறவைகள் கூட்டமாய் கோபுரத்தைப் பிரதக்ஷிணம் செய்யுமாம். மூன்று சுற்றுக்கள் பிரதக்ஷணமாயும் நான்காவது சுற்று அப்பிரதக்ஷணமாயும் செய்யுமாம். இது வருஷா வருஷம் நடைபெறும் அதிசயம்.வானத்தில் இருந்து தேவர்கள் வந்து வலம் வருவதாகவும் ஐதிகம் பாருங்கள் நண்பர்களே ஒம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவா 🙏🏼🙏🏼,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: various fb posts with same caption
உண்மை அறிவோம்:
பொதுவாக, கோயில்கள் மட்டுமல்ல, ஆன்மீக தலங்கள், புராதன பகுதிகளில் புறாக்கள், கிளிகள், வௌவால்கள் போன்ற பறவையினங்கள் அதிகளவில் காணப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பதிவில், இது மகா சிவராத்திரி நாளில் மட்டுமே நடக்கும் அரிய நிகழ்வு என்பது போல தகவல் பகிர்ந்துள்ளனர்.
உதாரணத்திற்கு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடுத்த வீடியோ ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, இது உண்மையா என ஆய்வு செய்ய தொடங்கினோம். அப்போது, மார்ச் 11, 2019 அன்று மகா சிவராத்திரி நாளில் உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி குறிப்பிட்ட வீடியோவை யூடியுப்பில் சிலர் பதிவேற்றம் செய்திருந்ததைக் கண்டோம்.
ஆனால், 2019ம் ஆண்டு மகா சிவராத்திரி இவர்கள் சொல்வது போல மார்ச் 11 அன்று வரவில்லை. மாறாக, மார்ச் 4 அன்று வந்திருக்கிறது.

எனவே, மகா சிவராத்திரி நாளில் இந்த அற்புதம் நிகழ்ந்ததாகக் கூறுவதே முதலில் தவறாகும்.
2021ம் ஆண்டில்தான் மார்ச் 11 அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. எனவே, 2019ம் ஆண்டில் மார்ச் 4ல் சிவராத்திரி முடிந்த பின், மார்ச் 11 அன்று எடுத்த வீடியோவை, 2021 மார்ச் 11 மகா சிவராத்திரி தேதியோடு தொடர்புபடுத்தி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
இதற்கடுத்தப்படியாக, உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் இத்தகைய பறவைகள் பறக்கும் நிகழ்வு தினசரி வழக்கமாக நிகழ்வதுதான் என்று கூறி ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் காணக் கிடைத்தன.
இந்த வீடியோவில், மார்ச் 10, 2019 அன்று குறிப்பிட்ட பறவைகள் பறக்கும் வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டதாகவும், ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் மந்திரங்கள் ஓதி, பூஜை செய்யும்போது, கோயில் கோபுரத்தைச் சுற்றி இவ்வாறு பறவைகள் பறப்பது வழக்கமான நிகழ்வுதான் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதேபோல, குறிப்பிட்ட வீடியோ பற்றிய உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கில், நியூஸ்18 ஊடகம், சம்பந்தப்பட்ட கோயிலுக்கே நேரில் சென்று ஆய்வு செய்து, செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 2019ல் வைரலாக பரவியபோதே, இது அறிவியல் ரீதியான பின்னணி கொண்ட விஷயம் என்று கூறி பலரும் விளக்கம் அளித்திருக்கின்றனர்.
இது தவிர, குறிப்பிட்ட உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் வலசை செல்லும் பறவைகள், Rosie Starling வகையை சேர்ந்தவை ஆகும். அவைதான், இத்தகைய தோற்றத்தை வானில் பறக்கும்போது, கூட்டமாக உருவாக்கும். இதுதொடர்பான ஆவணப் படம் ஒன்றின் லிங்கையும் கீழே இணைத்துள்ளோம்.
இதனையே, களத்தில் ஆய்வு செய்த நியூஸ்18 ஊடகமும், குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனவே, அறிவியல் பூர்வமான விசயத்தை எடுத்து, ஆன்மீக ரீதியான தகவல் இணைத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் மட்டும் பறவைகள் வருகிறதா?
Fact Check By: Pankaj IyerResult: Explainer
