தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தில் உள்ள படுக்கை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சொகுசு அறை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இது பாத யாத்திரையா.. இல்ல படுக்கை யாத்திரையா..🤔 2 வருசம்முன்ன இவன் யாருன்னே அந்த கட்சிக்கு தெரியாது..ஆனா இன்று அந்த கட்சிக்கு நான் மேனேஜர் கிடையாது தலைவன்றான். மாச செலவுக்கு 8 லட்சம் ஃபிரியா கிடைக்குது.. கட்சி செலவுல மாசம் ஒரு வெளிநாட்டு பயணம்.. இப்ப பாத யாத்திரை போறேன்னா.. வேண்டாம் படுக்கை யாத்திரை போ னு சொகுசு வண்டி வச்சு அனுப்புறாங்க.. வாழ்றான்யா ஆடு.." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை வசீகரன் கார்த்திக் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 27ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை ஒன்றைத் தொடங்குகிறார். பாத யாத்திரை மேற்கொள்ள வாகனம் ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் அண்ணாமலைக்காகத் தயாரிக்கப்பட்ட படுக்கை என்று ஒரு புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: vehiclemodification.net I Archive

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மாற்றங்கள் செய்யப்பட்ட டெம்போ டிராவலர் வாகனம் என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை சில இணைய தளங்கள் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. டெம்போ டிராவலர் வாகனங்களில் மாற்றங்கள் செய்யும் பல நிறுவனங்கள் இந்த படத்தை தங்கள் தளங்களில் பயன்படுத்தியிருப்பதையும் காண முடிந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து தவறாகப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

அடுத்து, அண்ணாமலை யாத்திரை வாகனத்தின் உட்புற தோற்றம் ஏதாவது வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். யாத்திரை வாகனத்தின் வீடியோ, புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தன. அதிததீவிர பாஜக ஆதரவாளர்கள் கூட வாகனத்துக்கு வெளியே நின்றுதான் வாகனத்தை புகழ்ந்து தள்ளுவதை காண முடிந்தது. அவர்களால் கூட உள்ளே செல்ல முடியவில்லை. வரும் நாட்களில் அண்ணாமலையின் வாகனத்தில் உள்ள வசதிகள் தொடர்பாக செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகலாம். இந்த கட்டுரை வெளியாகும் வரை உட்புற அலங்காரம், வசதிகள் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

நம்முடைய ஆய்வில், அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை என்று பகிரப்படும் புகைப்படம், இணையதளத்திலிருந்து எடுத்தது. உண்மையான புகைப்படம், வீடியோ எதுவும் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலை பாத யாத்திரைக்கு பயன்படுத்தும் வாகனத்தில் உள்ள படுக்கை வசதி என்று பரவும் படம் டெம்போ டிராவலர் உள் அலங்காரம் தொடர்பான பழைய புகைப்படம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தின் படுக்கை என்று பரவும் படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False