கிழக்கிந்திய கம்பெனி 1612ம் ஆண்டிலேயே ஐயப்பன் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஐயப்பன் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் இருபக்கங்கள் பகிரப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு அந்த நாணயத்தை வெளியிட்டதாக அதில் உள்ளது. அதனுடன் "400 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம். கடந்த 1616 ஆம் வருடம் பிரிட்டனின் கிழக்கு இந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டுள்ளது. சபரிமலை ஶ்ரீஐயப்பன் வழிபாடு என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வழிபாடு வெகு சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு சிலர் கூறுவது தவறான தகவல் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை ஆன்மீக களஞ்சியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Karupana Raju Baskaran என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் 1600ம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. அதன் பிறகுதான் இந்தியாவுக்கு வந்து வணிகம் செய்வதற்கான உரிமையைப் பெற்றனர். 1608ம் ஆண்டில் அவர்கள் சூரத்துக்கு வந்தனர் என்று தெரிகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள நாணயத்தில் குறிப்பிடப்பட்ட ஆண்டில்தான் அப்போது ஆட்சி செய்த முகலாய மன்னரான ஜஹாங்கீரிடம் வணிகம் செய்வதற்கான உரிமையை பெற்றதாக வரலாறு கூறுகிறது. நாடு பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக நாணயம் வெளியிட வேண்டிய தேவை இல்லை என்பதால் இந்த பதிவு தொடர்பான சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. 1616ம் ஆண்டுக்குப் பிறகு வர்த்தக மையங்களை சூரத், சென்னை, மும்பை, கொல்கத்தாவில் கிழக்கு இந்திய கம்பெனி நிறுவியதாக வரலாற்று கூறுகிறது.

முன்பு இதே போன்று பிரிட்டிஷ் அரசு ராமர் பட்டாபிஷேகம் காட்சியுடன் கூடிய நாணயத்தை வெளியிட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர். ஆனால், அப்படி எந்த ஒரு நாணயத்தையும் பிரிட்டிஷ் அரசு வெளியிடவில்லை என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த சூழலில் ஐயப்பன் உருவத்துடன் நாணயம் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: rbi.org.in I Archive

இந்திய நாணயங்கள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய இணையதளத்தில் விரிவான தகவலை வெளியிட்டுள்ளது. பண்டைய காலம் முதல் தற்போதைய காலம் வரையிலான நாணயங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர். எனவே, அந்த இணையவழி நாணய அருங்காட்சியகத்தில் ஐயப்பன் படத்துடன் கூடிய நாணயம் உள்ளதா என்று பார்த்தோம்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த தகவலில், ஆங்கிலேயர்கள் மும்பை - சூரத், சென்னை, கொல்கத்தா என மூன்று பகுதிக்கு என தனித்தனியாக நாணயங்களை உருவாக்கினர். 1717ல் முகலாயர்களின் நாணயத்தை அச்சடிப்பதற்கான உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றனர். 1830ன் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆதிக்க சக்தியாக மாறிய பிறகு நாணயங்கள் வெளியிட்டனர். 1835ல் நாணய சட்டத்தை இயற்றி சீரான நாணயங்களை வெளியிட்டனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: rbi.org.in I Archive

மேலும் தொடக்க காலத்தில் சூரத், சென்னை, கொல்கத்தா பகுதிகளில் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட நாணயங்களின் புகைப்படத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அதில் ஐயப்பன் உருவம் இல்லை. இவற்றின் மூலம் இந்த நாணயம் உண்மையானது இல்லை என்று உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில்,

கிழக்கிந்திய கம்பெனி 1600ம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. 1612ம் ஆண்டுதான் வர்த்தம் செய்வதற்கான பேச்சு வார்த்தையை அப்போது ஆட்சி செய்த முகலாயர்களிடம் நடத்தியுள்ளனர். அப்படி இருக்கும் சூழலில் நாணயம் வெளியிட வேண்டிய தேவையில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

1717ல் தான் நாணயங்கள் அச்சிடும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனி பெறுகிறது. இந்தியாவின் பெரும் பகுதிகளைப் பிடித்த பிறகு 1830ம் ஆண்டுக்குப் பிறகே நாணயங்களை வெளியிட்டது என்று ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயங்களில் ஐயப்பன் உருவம் இல்லை.

முன்பு இதே போன்று ராமர் உருவத்துடன் நாணயம் வெளியானது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. அது போலியானது என்று ஏற்கனவே ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது.

Fact Crescendo Tamil Link

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட ஐயப்பன் நாணயம் என்று பகிரப்படும் நாணயம் உண்மையில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆங்கிலேயர்கள் வெளியிட்ட ஐயப்பன் உருவம் பதித்த நாணயம் என்று பகிரப்படும் படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கிழக்கிந்திய கம்பெனி 1612ல் ஐயப்பன் நாணயத்தை வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False