கிரிக்கெட் வீரர் சச்சின், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து குடும்பத்தினருடன் விறகடுப்பில் சமையல் செய்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கிரிக்கெட் வீரர் சச்சின் தன் குடும்பத்தினருடன் விறகு அடுப்பில் சமைப்பது போன்ற படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. மோடி கேஸ் சிலிண்டருடன் இருப்பது போலவும், அதில் 2014ல் ரூ.410, 2022ல் 1062 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்துக்கு கீழ், "சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து விறகடுப்பில் குடும்பத்துடன் சமையல் செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்த சச்சின்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்பட பதிவை பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 மே 6ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு சச்சின் தன்னுடைய 50வது பிறந்தநாளைக் கொண்டாடியதாகப் படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அதில் அவர் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, சச்சின் படத்தை வைத்து தவறான தகவலை பகிர்ந்திருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தோம்.

Archive

சச்சின் வெளியிட்டிருந்த பதிவை அவரது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுத்தோம். அதில், "ஒவ்வொரு நாளும் நாம் அரை சதம் அடிப்பதில்லை. அப்படி அரை சதம் அடிக்கும்போது நமக்கு மிக முக்கியமானவர்களுடன் அதைக் கொண்டாடுவதுதான் மதிப்புக்குரியது. சமீபத்தில், அமைதியான ஒரு கிராமத்தில் என் 50-வது பிறந்தநாளை என் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினேன். அர்ஜுன் ஐ.பி.எல்- இல் தீவிரமாக இருப்பதால் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று ஆங்கிலத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கேஸ் விலை உயர்வு பற்றி அவருடைய சமூக ஊடக பக்கங்களில் அவர் எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை. அவர் சமீபத்தில் ஏதும் கேஸ் விலை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தாரா என்று தேடிப் பார்த்தோம். அப்படி நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படத்தை பயன்படுத்தி தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சச்சின் தன்னுடைய 50வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை எடுத்து தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கேஸ் விலை உயர்வை கண்டித்து விறகடுப்பில் சமைத்த சச்சின் என்று பரவும் விஷம பதிவு!

Fact Check By: Chendur Pandian

Result: False