
கேஸ் கிடைக்காததால், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சியை மக்கள் முற்றுகையிட்டதாக ஒரு நியூஸ் காரட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நயினார் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள். கேஸ் தட்டுப்பாடு இல்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் கேஸ் கிடைக்காததால் திருநெல்வேலியில் உள்ள அவரது கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்திருந்தார். மேலும், “நானே ஒரு கேஸ் ஏஜென்சி வைத்திருக்கிறேன். நானே ஒரு கேஸ் டீலர் தான். எங்கு உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமோ நான் தருகிறேன்” என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரது கேஸ் ஏஜென்சியை மக்கள் முற்றுகையிட்டதாக நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டை பார்க்க அந்த குறிப்பிட்ட செய்தி ஊடகம் வெளியிட்டது போலவே உள்ளது. வழக்கமாக அந்த ஊடகம் வெளியிடும் நியூஸ் கார்டுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் தேதி வழக்கத்தை விட பெரிதாக இருந்தது. மேலும், ஏஜென்சி என்பதை ஏஜன்சி என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால், இது போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
முதலில் இந்த நியூஸ் கார்டை அந்த ஊடகம் வெளியிட்டதா என்று அறிய அந்த ஊடகத்தின் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, அந்த ஊடகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவர்கள், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு அவர்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவாக வெளியிட்டனர்.
இந்த செய்தியாவது உண்மையா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. நெல்லை நகர செய்தியாளர்களை தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்களும் அப்படி முற்றுகை போராட்டம் நடந்ததாக தகவல் இல்லை. இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேஸ் சிலிண்டர் கேட்டு நயினார் நாகேந்திரனின் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


