மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்- உண்மை என்ன?

அரசியல் சமூக வலைதளம்

‘’மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

Mohanraj T என்பவர் அக்டோபர் 1, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’1330 குறள்களில் ஏதேனும் ஒன்றை பிழையின்றி சொன்னால் முதல்வர் நாற்காலியை தர தயார்,’’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதும் சவால் விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. உதாரணமாக சில செய்திகளை இங்கே இணைத்துள்ளோம்.

Vikatan Link Thanthi TV VideoNews 18 Tamil Link

இப்படி பலவிதமாக, இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வரும் சூழலில், சமீபத்தில் ‘’எங்களை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை,’’ என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளோம்.

ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, திருக்குறளை பிழையின்றி ஸ்டாலினால் பேச முடியுமா, என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்திருந்ததாக, எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. இப்படி ஒருவேளை செய்தி வெளியாகிருக்குமோ என்ற சந்தேகத்தில் கூகுளில், யூ டியுப்பில் நீண்ட நேரம் தகவல் தேடினோம். அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அஇஅதிமுக தரப்பில் விவரம் கேட்டோம். எடப்பாடி பழனிசாமி அப்படி பேசினாரா என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை எனக் கூறிவிட்டனர்.

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு, அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பெயரில் அதில் நியூஸ் கார்டு இடம்பெற்றுள்ளது. இதன்பேரில், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தையே தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயற்சித்தோம்.

இதன்படி, புதிய தலைமுறை மூத்த நிருபர் மோகன்ராஜிடம் பேசியபோது, ‘’இது தவறான தகவல். புதிய தலைமுறை பெயரை பயன்படுத்தி சிலர் போலியான தகவலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்,’’ என்றார்.

அந்த நியூஸ் கார்டை Fotoforensics.com இணையதளத்தில் தகவல் தேடினோம். அப்போது, இது தவறான தகவல் என தெளிவாக தெரியவந்தது.

இவர்கள் கூறுவதுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக இவ்வாறு சவால் விட்டிருந்தால் அது தமிழகத்தில் பேசப்படும் பொருளாக மாறியிருக்கும். டிவிகளில் முக்கிய செய்தியாக விவாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்படி எந்த பரபரப்பும் நடக்கவில்லை.

முடிவு:

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்- உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False