பாட்னாவில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

பீகாரில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்தது. உயிரோடு இருக்கும் பொழுதே இறந்து விட்டதாக பட்டியலில் சேர்த்தது. 70,000 இஸ்லாமியர்கள் பெயரை 20 தொகுதிகளில் இருந்து நீக்கியது. பீகார் மாநிலத்திற்கு சம்பந்தமில்லாத சுமார் மூன்று லட்சம் பேரை வாக்கு பட்டியலில் சேர்த்தது. வாக்கு செலுத்த வந்த தலித் மக்களையும் இஸ்லாமிய சிறுபான்மையினரையும் தாக்கியது. அனைத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்து அனைவரையும் வெளியேற்றியது. போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு ஆட்சியைப் பிடித்த பாஜகவிற்கு எதிராக பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த முறைகேட்டைச் செய்த பாஜக-வை எதிர்த்து பீகார் தலைநகர் பாட்னாவில் மக்கள் போராட்டம் வெடித்தது என்று பலரும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் இசைக் குழு ஒன்று செல்வதைக் காண முடிந்தது. கலவரம் செய்பவர்கள் இசைக்குழுவோடு செல்வார்களா என்ற கேள்வி எழவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். கடந்த சில நாட்களாக அந்த வீடியோவை பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. குஜராத்தி மொழியில் பல பதிவுகள் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. ஒரு சிலர் பீகாரில் வாக்குத் திருட்டுக்கு எதிராக என்றும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர். இதனால், குழப்பம் அதிகரித்தது.

ஒரு வீடியோ பதிவில் “Jai Bajrang Band, At Netrang 15/11/2025. MLA Chaitar Vasva” இது பற்றித் தேடினோம். Netrang (நேத்ராங்) என்பது குஜராத்தில் இருக்கும் ஒரு ஊர் என்பதும்MLA Chaitar Vasava என்பவர் குஜராத்தின் ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-என்றும் தெரியவந்தது. தொடர்ந்து தேடிய போது சைதர் வாஸ்வா சமீபத்தில் பிர்சா முண்டா என்ற ஆதிவாசி இன தலைவரின் 150 ஆண்டு விழாவைக் கொண்டாடினார் என்றும் இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள் என்றும் செய்திகள் கிடைத்தன.

நேத்ராங் என்ற ஊரின் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ கிடைக்கிறதா என்று பார்த்தோம். அந்த ஊரின் ஸ்ட்ரீட் வியூ நமக்கு கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள இடங்கள் ஒத்துப்போகிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது இரண்டு வீடியோவிலும் உள்ள கட்டிடங்கள், மிகப்பெரிய கொடிக் கம்பம் என பலரும் ஒத்துப்போயின. இதன் மூலம் இந்த வீடியோ நேத்ராங் என்ற குஜராத்தின் நகரில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

நமக்கு சமூக ஊடகங்களில் பல நல்ல தெளிவான வீடியோக்களும் கிடைத்தன. அவற்றைப் பார்க்கும் போது பிர்சா முண்டாவின் புகைப்படத்துடன் பேனர்கள் இருந்ததை காண முடிந்தது. இதன் மூலம் பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜக-வுக்கு எதிராக பேராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஏற்பாடு செய்திருந்த பேரணி வீடியோவை பீகாரில் பாஜக-வுக்கு எதிராக போராடும் மக்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை  தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பாட்னாவில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply